
posted 9th March 2022
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரது கண்ணீருக்கு மத்தியிலும், உழைப்புக்கேற்ற ஊதியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் மலையகப் பாட்டாளி வர்க்கப் பெண்களின் வேதனைகளுக்கு மத்தியிலும், நவீன உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, வேதனையின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பெண்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்படுகிறோம். இந்நிலையில் ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலையில் நேர்மையான பாதையைத் தெரிவு செய்து, பயணிப்பவர்களோடு நாங்களும் கைகோர்த்துப் பயணிக்கத் தயாராகவுள்ளோம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் இரா. ஜீவன் இராஜேந்திரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விளாவெட்டுவானில் இடம்பெற்ற சர்வதேச மகளிர்தின நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் உபதலைவர் திருமதி சுமதி மகேசன் தலைமையில் விளாவெட்டுவான் முதியோர் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது;
உலகின் முதலாவது பெண் அரச தலைவரைத் தெரிவு செய்த பெருமைக்குரியதும், மொத்த சனத்தொகையில் 56 சதவீதம் பெண்களாக இருக்கும் எமது நாட்டின் அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் 5 சதவீதம் அளவிலேயே பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதென்பது வெட்கக் கேடான விடயமாகும்.
பெண்கள் தமக்கெதிரான வன்முறை, ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் நீங்கள் துணிந்து அரசியலுக்குள் வர வேண்டும். இந்நிலையில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியதை இன, மத, மொழி மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டு பெற்றுக் கொள்ள தடைகளை உடைத்தெறிந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.
பெண்களின் ஒருமித்த உரிமைக்குரல் ஆணாதிக்க வெறியர்களின் காது கிழிய ஒலிக்க வேண்டும். இந்த நாளைக் ஒன்று கூடிக் கலையும் நாளாக ஆக்கி விடாமல் பெண்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான ஆரம்ப நாளாக இதனை எடுத்து செயற்பட இவ்வேளையில் உறுதி பூணுவோம். இந்நிலையில் ஒற்றுமையே உங்களை அனைத்து வன்முறைகளிலிருந்தும் விடுவிக்கும். இது காலம் எமக்குக் கற்றுத் தந்த பாடம் என்றார்.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House