
posted 5th March 2022
'நாம் இன்று நோன்பு இருக்க வேண்டும் என நினைக்கிறோமா அன்றுதான் நமக்கு நிறையப் பசிக்கும்!' என்பது நம் பரவலான அருள்புலம்பல்!
தவக்காலத்தில் நோன்பு இருத்தல் ஒவ்வொரு நபரையும் பொருத்து மாறுபடுகிறது.
'நோன்பு இருத்தல் அவசியமா? அவசியமில்லையா?' என்ற கேள்வி நம்முள் பல நேரங்களில் எழுகிறது. 'மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என்னும் இயேசுவின் கேள்வியில் நோன்பும், துக்கமும் ஒன்றோடொன்று இணைந்தவை என்று புலனாகிறது. முதல் ஏற்பாட்டில், 'இதுவா நான் விரும்பும் நோன்பு' என்று ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் கேள்விகள் எழுப்பி, தான் விரும்பும் நோன்பு எது என்பதை முன்மொழிகின்றார்.
நோன்பு என்றால் என்ன?
'விரும்பி பசி ஏற்றலே' நோன்பு. மருத்துவர்கள் சில நேரங்களில் நோன்பைப் பரிந்துரைக்கிறார்கள். பயணம் செய்யும், அல்லது புலம் பெயரும் நபர்கள் தங்கள் பசியைப் பொறுத்துக்கொள்கிறார்கள். உணவின்றி வாடும் ஏழைகள்மேல் பசி புகுத்தப்படுகிறது. இவை எல்லாம் நோன்பு அல்ல. இவை எல்லாம் நாம் பசித்திருக்கும் தருணங்கள்.
நோன்பு இருப்பதில் நாம் நம் கட்டின்மையை, சுதந்திரத்தை வெளிப்படுத்துகின்றோம். அதாவது, என் முன் இருக்கின்ற உணவு என் கண்களுக்குக் களிப்பூட்டினாலும், உண்பதற்குச் சுவையாக இருந்தாலும், நான் அதை மறுக்கிறேன். அதை விரும்பி மறுக்கிறேன். என் விருப்புரிமை மற்றும் தன்னுரிமையைப் பயன்படுத்தி மறுக்கிறேன்.
சிறுவன் ஒருவனிடமிருந்து பேயை ஓட்டும் நிகழ்வில், 'இவ்வகைப் பேயை நோன்பினாலும் இறைவேண்டலாலும் அன்றி வெளியேற்ற இயலாது' என்கிறார் இயேசு. இங்கே, நோன்பு என்பது கடவுளிடம் நாம் சார்ந்திருக்கும் நிலையைக் கொண்டாடுவதைக் குறிக்கிறது.
ஆக, ஒரு பக்கம், நோன்பு தன்னுரிமையின் அடையாளமாகவும், இன்னொரு பக்கம் சார்புநிலையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.
முதல் வாசகத்தில், ஆலயம் அல்லது வழிபாடு சார்ந்த நோன்பைத் தவிர்த்து, சமூகநீதி சார்ந்த நோன்பை மேற்கொள்ளுமாறு தன் குழுமத்திற்கு இறைவாக்குரைக்கின்றார் எசாயா: 'கொடுமைத் தளைகளை அவிழ்ப்பது, நுகத்தின் பிணையல்களை அறுப்பது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவது, பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பது, தங்க இடமில்லா வறியோரை இல்லத்திற்கு இல்லத்திற்கு அழைத்து வருவது, உடையற்றோரை உடுத்துவது, தன் இனத்தாருக்குத் தன்னை மறைத்துக்கொள்ளாமல் உதவி செய்வது.'
இப்படிச் செய்தால் ஆண்டவர் அவர்களுடைய குரலைக் கேட்பார் என முன்மொழிகின்றார் எசாயா.
இன்று நான் இருக்கும் நோன்பு தன்மையம் விடுத்து பிறர்கட்டின்மை நோக்கி நகர்ந்தால் எத்துணை நலம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House