
posted 5th March 2022
எமது நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழலில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை நாம் சந்தித்துக் கொண்டி ருக்கின்றோம் என பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நான்காம் குறிச்சிப் பகுதியில் அமைக்கப்பட்ட மட்பாண்டக் கைத்தொழில் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டதாவது;
குறித்த இப்பிரதேசத்தில் அதிகளவில் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், அவர்கள் வளரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். கடந்த காலங்களில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக என்னால் 10 இலட்சம் ரூபா நிதி பெற்றுக் கொடுக்க முடிந்தது. அதன் அடுத்த கட்டமாக உங்களுக்காக இன்று 50 இலட்சம் ரூபா செலவில் இம்மட்பாண்ட கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்படுள்ளது.
சௌபாக்கியா உற்பத்திக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள பௌதிக வளங்களைக் கண்டறிந்து, அதனூடாக உற்பத்திக் கிராமங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டமானது, இன்று நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு பனை உற்பத்தி சார்ந்த முன்மொழிவுகளைக் கேட்டு பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பியுள்ளோம்.
கிராமங்கள் தன்னிறைவு அடையும் போது நாடும் தானாகவே தன்னிறைவடையும். இந்நிலையில் எமது மாவட்டமானது பல்வேறு வளங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பினும்,. இவ்வளங்களை உரிய வகையில் பயன்படுத்தவதற்கான முறைமை இதுவரை உருவாக்கப்படவில்லை. அதுதான் இங்குள்ள மிகப் பாரிய குறைபாடாகும். இதனை நாம் உரியவாறு பயன்படுத்துவதற்கான செயற்பாடுகளை உரிய வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளும் போது, உரிய பயனை அடைந்து கொள்ள முடியும். இவ்வாறாக அந்நடைமுறைகள் சரியான முறையில் பங்குபற்றப்படுமாகில் நாம் அடுத்த நாடுகளில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பாடாது.
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு, கொரோனா அச்சுறுத்தல், எண்ணெய் விலை அதிகரிப்பு என அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகள் எம்மை ஆட்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவற்றை உரிய வகையில் எதிர்கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் கடன்சுமை, மறுபுறம் அரசாங்கத்துக்கெதிரான விமர்சனங்கள். இவை யாவற்றையும் மிக அவதானமாக அரசாங்கம் எதிர்கொண்டு நாட்டை வளமிக்கதாகமாற்ற மாற்ற உறுதியாகப் பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்