
posted 31st March 2022

அப்துல் மஜீத்
“நாட்டில் எல்லா சமூகமும் அனுபவிக்கும் இன்றைய துயர நிலையில், முஸ்லிம் சமூகமும் அந்த பாதிபுகளுக்கு உட்பட்டு சிக்கித்தவிக்கிறது என்பதை வெளிக்காட்டி அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் நோக்கமாகும்”
இவ்வாறு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்றைய அரசுக்கு, மக்களின் அவலநிலை தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்கென நடத்தும் பாரிய பேரணி தொடர்பிலும், வாதங்கள் தொடர்பிலும் நமது “தேனாரம்” இணைய ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
தவிசாளர் அப்துல் மஜீத் மேலும் நமது செய்தியாளரிடம் கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு கூறினார்.
“இன்றைய ஆட்சியினருக்கு சேவகம் செய்யும் சிலரும், அவரது அடிவருடிகளும் நாட்டு மக்கள் இன்று அனுபவிக்கும் வாழ முடியாத நெருக்கடிகளுக்குள் முஸ்லிம்கள் சிக்கவில்லையெனவும், பொருளாதார வளத்துடன் தான் வாழ்கின்றார்களெனவும் காட்ட முனைந்திருப்பதை நாமறிவோம்.
உண்மையில் இன்றைய பொருளாதார வாழ்வியல் நெருக்கடிகளால் எமது மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி திண்டாடிவருவது கண்கூடானதாகும்.
2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்த இன்றைய கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசு பௌத்த சிங்கள மேலாதிக்க நிகழ்ச்சி நிரலைக் கொண்ட ஆட்சியைத் தொடர முற்பட்டதும், வியத்கம என்ற தொழில்சார் வல்லுனர்களின் பிழையான, தீர்க்க தரிசனமற்ற பொருளாதார கொள்கையை முன்னெடுத்தமையுமே நாட்டின் இன்றைய பிற்போக்குத்தனமான, மக்களை வதைக்கும் நிலைக்குக்காரணமாகும்.
இன்று அத்தியாவசியப்பொருட்களுக்கான விலை வாசி உயர்வு தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு நீண்ட கியூ வரிசையுகம், கியூ வரிசையில் மரண அவலங்கள் என தொடர்ந்த வண்ணமுள்ளன.
இந்த அவல நிலைகளால் நகர, கிராமிய தோட்டப்புற மக்களனைவரும் பாதிக்கப்பட்டு, அதனைக்கண்டித்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களும், கண்டனப் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன.
எனவேதான் நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சி செய்ய வேண்டிய கடமையாக ஆர்ப்பாட்டப் பேரணியை முஸ்லிம் காங்கிரஸ் நடத்துகின்றது.
இதனைப் பொறுக்க முடியாத இன்றைய வக்கில்லா அரசின் கூஜாதூக்கிகள் முஸ்லிம் சமூகத்தை ரவூப் ஹக்கீம் காட்டிக் கொடுக்கமுனைவதாக இன்று கதை பரப்பத் தொடங்கியுள்ளனர்.
இது அபத்தமான கூற்றாகும். மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் 1980களில் முஸ்லிம்காங்கிரஸை ஸ்தாபித்த போதும் அவரை நோக்கி இதே கதையைத்தான் கட்டவிழ்த்து விட்டனர்.
இதேபோன்ற அன்றைய அரசின் அடிவருடிகளும், கூஜா தூக்கிகளும் விசமத்தனமான பிரச்சாரங்களைச் செய்தும் மக்களிடம் அவை எடுபடாது செல்லாக்காசாகின என்பது வரலாறாகும்.
நடைபெறும் பேரணி கட்சி வேறுபாடுகளுக்கப்பால், மக்களின் பிறப்புரிமையான ஜனநாயக உரிமையை எடுத்துக்காட்டும் வகையிலேயே அமையும்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House