
posted 20th March 2022

ரவூப் ஹக்கீம்
“கொவிட் - 19 இல் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் அதறப்பதற எரித்த சாபமே இலங்கை அரசின் இன்றைய நிலைக்குக் காரணமாகும். இந்த சாபம் அரசை விட்டு வைக்காது”
இவ்வாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆக்ரோஷத்துடன் கூறினார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸின் 5ஆவது ஆண்டு நிறைவையொட்டிய மாபெரும் இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சம்மாந்துறை நகரே பெரும் விழாக்கோலம் பூண்ட வகையிலும், முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் இளைஞர்களும், முஸ்லிம் மக்களும் கொண்டுள்ள பற்று, விசுவாசத்திற்கும் ஆதரவுக்கும் எடுத்துக்காட்டான எழுச்சிப்பெருவிழாவாக இந்த ஒன்று கூடல் அமைந்திருந்தது.
முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸ் தலைவர் (எஸ்.ரி.ஆர்) அல்ஹாபிழ் ஹாதிக் இப்றாஹிம் தலைமையில், சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் இந்த மாபெரும் இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சம்மாந்துறை நெல்லுபிடி சந்தியிலிருந்து, தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் இளைஞர் காங்கிரஸினரால் வரவேற்கப்பட்டு பெரும் ஊர்வலமாக நிகழ்வு இடம்பெற்ற அப்துல் மஜீத் மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
கொவிட் - 19 காலத்தில் அதனால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, ஏன் சிறு குழந்தையின் ஜனாஸாவைக்கூட எரித்து இன்றைய அரசு முஸ்லிம் மக்களைப் புண்படுத்திய கறைபடிந்த வரலாற்றின் சாபமே.
இன்றைய அரசின் நிலைக்கு காரணமென கடும் விசனத்துடன் கூறிய தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த சாபம் அரசை விட்டு வைக்காதெனவும், இன்றைய அரசைக் கொண்டுவந்த பெரும்பான்மையின மக்களே அரசைத்துரத்தியடிக்கும் நிலைக்கு வந்து விட்டனரெனவும் கூறினர்.
நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்த ஒன்று கூடலில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
இன்றைய அரசு நாட்டை நாசமாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையையே பாழடித்துள்ளது “ஏழு மூளையை” நம்பி இனி பிரயோசனமில்லை என்பதும் நிருபணமாகியுள்ளது.
நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி இன்று நாட்டு மக்களை படுபாதாளத்துள் தள்ளியிருக்கின்றது. எந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடத்த்தில் மக்களின் சாபத்தை பெற்ற அரசாங்கமொன்றை இதற்கு முன்னர் நான் காணவில்லை. வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லுமளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மாறியுள்ளனர்.
இன்றைய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று பிச்சை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு எந்த நாட்டில் போய் வாங்குவது. மீண்டும் இவ்வாறான நெருக்கடி ஏற்படும். இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் கிரேக்கத்திலும், லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தன.
அந்த நாடுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சியினை அமைத்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தன. அவ்வாறான நிலைமைதான் எமது நாட்டிற்கும் ஏற்படப்போகின்றது. நாங்கள் ஆட்சி பிடிப்பதற்கான எவ்வித அவசரமும் தேலையில்லை.
தற்போதைய அரசின் சாபமானது முஸ்லிம்களின் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கனை கதரக்கதரக் எரித்த சாபம் இந்த ஆட்சியாளர்களை உருபோதும் விட்டு வைக்காது.
தங்களது ஆட்டம் காண்கின்ற அரசாங்கத்தினை நிலைநிறுத்த ஒரேயொரு ஆயுதமாக இடி இடிக்கும் போது இரும்பைத் தூக்கி போடுகின்ற மாதிரி முஸ்லிம்களின் மீது பல்வேறு சதிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கு அஞ்சி ஒடுங்கி இனியும் பயந்துபோய் மூலையில் இருக்கின்ற சமூகமாக முஸ்லிம் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அதனுடைய வீரியம் இன்று ஏதோ நலிந்துபோய் விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான காலம் கனித்து விட்டது.
முஸ்லிம் சமூகத்திற்காக தைரியமாக முகங்கொடுப்பதற்கு பலமான இயக்கமும், போராளிகளும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில்தான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடுபூராகவும் வந்திருக்கின்ற எதிர்ப்பு அலையை முஸ்லிம் காங்கிரஸ் சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பலமான போராட்டத்தினை முன்னெடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது.
இந்த இயக்கத்தின் மீது போராளிகள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை பலமானது. இந்த இயக்கம் பலமானது என்ற காரணத்தினால் அதன் தலைமை தயங்காமல் முடிவெடுக்கக்கூடிய தைரியம் இருக்கின்றது.
இந்த இயக்கத்தின் பலத்தினை சீரழிப்பதற்கு அதிகாரங்களை கொடுத்து மக்களை வசப்படுத்துவதற்கான பல்வேறு எத்தனங்கள் அரங்கேறியுள்ளன. அதற்கு போராளிகள் இடங்கொடுக்கக் கூடாது.
எனவே, கட்சி போராளிகள் இருக்கும் வரை அதன் தலைமையிடம் தயக்கம் கிடையாது. பயமில்லாமல், பீதியில்லாமல் எதிர்கொள்ளலாம். இந்த இயக்கத்தினை வாழ வைப்பதற்கு இந்த நிலைமாறும் காலத்தில் இந்த இயக்கம் இன்னும் புதிய வீரியத்தோடு முன்னேறிச் செல்ல அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், எம்.எஸ். உதுமா லெவ்வை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House