பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் - கண்டியில் ரவூப் ஹக்கீம் காட்டம்!

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தற்காலிகமாக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் சகல சமூகத்தினரையும் பாதிக்கும் விதத்தில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுவருவதால் அதனை முற்றாக நீக்க வேண்டியது அவசியமென ஸ்ரீலங்கா முஸ்லிம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கண்டி நகரில் வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கான கையெழுத்துத் திரட்டும் நிகழ்வின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

பௌத்தர்களைப் பொறுத்தவரை அவர்களது புனித ஸ்தலமான தலதாமாளிகை அமைந்துள்ள கண்டி மாநகரில் இன்று நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் உட்பட, எல்லாச் சமூகத்தவர்களும் இந்த கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக இந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது ஒரு சமூகத்துக்கு மட்டும் உரியதல்ல. இந்தச் சட்டத்தின் விளைவாக எல்லா சமூகத்தினரும் இந்த நாட்டில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். ஆகவே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கையெழுத்திடுவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டம் என்ற போர்வையில் இன்று தன்னுடைய அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதற்கும், தங்களுக்கு எதிராக விமர்சனம் செய்கின்ற சிவில், சமூக செயற்பாட்டாளர்களைப் பிடித்து, கைது செய்து வகைதொகை இல்லாமல் அடைத்து வைத்து, அவர்களைப் பலவந்தப்படுத்தி, அவர்களிடமிருந்து குற்ற ஒப்புதல்களைப் பெற்று, அதன் மூலம் நடக்கும் அராஜகத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற இந்தப் பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் பெறப்படுகின்ற குற்ற ஒப்புதல்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் முன்னால் கொடுக்கப்படுகின்ற போது அது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்ற ஓர் ஏற்பாடு இருக்கின்ற காரணத்தினால் சாதாரணமாக குற்றவியல் சட்டத்தில் ஒரு சந்தேக நபருக்கு இருக்கின்ற குறைந்தபட்ச பாதுகாப்பும் இல்லாத நிலைமை காணப்படுகிறது என்பது குறித்தும் தொடர்ந்தும் பல நீதிமன்றங்கள் அதற்கு எதிரான விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றன.

சர்வதேச ரீதியாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் அதனை விமர்சித்திருக்கிறார்கள். அது மாற்றப்பட வேண்டும்; இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையிலேயே ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளுக்கான ஆணையாளர் அதுபற்றித் தெளிவாக கூறியிருக்கிறார். இங்கிருந்து சென்றிருக்கின்ற பேராயர் பெருந்தகை அங்கிருக்கிற மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளரைச் சந்தித்த பிறகு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இந்த நாட்டினுடைய பாதுகாப்புத் தரப்பு இருந்திருப்பதான விஷயம் சம்பந்தமாக சரியான விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என்று மிக வலிமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதன்மூலம் வேண்டுமென்று இந்த நாட்டில் 250க்கும் மேற்பட்ட எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களின் உயிர்களைப் பலியெடுத்த, படு பயங்கரமான செயலுக்குப் பின்னால் முஸ்லிம்கள் சிலர் தற்கொலைக் குண்டுதாரிகளாக இருந்தார்கள் என்ற உண்மைக்குப் பின்னால், வேறு இரகசிய உளவுத்துறைச் செயற்பாடுகள் இருந்திருக்கின்றனவா? என்பதைப் பற்றி ஆராய வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது என்பதை இன்று மனித உரிமைகள் ஐக்கிய நாடுகள் ஆணையாளரே ஜெனிவாவில் சொல்லுகின்ற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

இந்தக் கட்டத்தில்தான் மத்துகமையில் தன்னுடைய குழந்தைகளுக்கு பால்மா வாங்கிக் கொடுக்க முடியாமல், உணவளிக்க முடியாமல் ஒரு தந்தை தன்னுடைய உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறார்; தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இந்த நாடு இன்று படுமோசமான பொருளாதார நிலைமைக்கு, ஒரு பஞ்ச நிலமைக்கு போய்க்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான பொருளாதாரத்தை, இந்த ஈன நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்ற இந்த அரசாங்கத்தினர் எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு முகமூடியைப் போட்டுக் கொள்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் கவசமாக, அதாவது கொவிட் தொற்றை இந்த நாட்டில் பரவாமல் தடுத்து விட்டோம். அதற்கு எடுத்த நடவடிக்கைகள் காரணமாகத்தான் இன்று பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லத் தலைப்படுகிறார்கள்.

ஆனால், இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்ற வேறு எந்த நாட்டிலுமே இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கைகள் கிடையாது. எல்லா நாட்டிலும் பொருளாதார வளர்ச்சி வீதம் கூடிக் கொண்டிருக்கின்றது. பங்களாதேஷில், இந்தியாவில், பாகிஸ்தானில், ஏன், மாலைதீவிலும் பொருளாதார வளர்ச்சி பல மடங்கு கூடி இருக்கிறது. ஆனால், எங்களுடைய நாட்டில் மட்டும் இன்று எங்களுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்வதற்குக் காரணம் இந்த ஆட்சியாளர்களின் இயலாமை என்பதை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறோம்.

எனவே, இந்த ஆட்சியாளருக்குள் இருந்த அமைச்சர்கள் சிலரும் கூட இன்று விலக்கப்பட்டிருக்கிறார்கள்; விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைச்சர்களைப் பற்றி நான் ஒன்றும் பேச வரவில்லை. அவர்கள் சார்பாக பேசுவதற்கு எந்த அவசியமும் கிடையாது. இருந்தாலும், அந்த அமைச்சர்களும் இந்த ஆட்சியாளர்களைக் கொண்டு வருவதற்குச் சொன்ன பொய்ப் பிரசாரங்களைப் பற்றி அவர்கள் தாங்களாக நினைத்து அதற்கான பாவமன்னிப்பைத் தேடுகின்ற காலம் வந்துவிட்டது.

இந்தக் கட்டத்தில் இந்த பயங்கரவாதச் சட்டத்தை ஒழிப்பதற்கான, இந்தச் சட்டப்புத்தகத்திலே இருந்து கிழித்தெறிவதற்கான இந்தக் கையெழுத்து வேட்டையில் சாரிசாரியாக மக்கள் கண்டி நகரில் கூடி கையெழுத்துப் இட்டிருக்கிறார்கள். இதனை வெற்றிகரமாக முடிக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம்.

புலனாய்வுப் பணிப்பாளர் ஷானி அபேசேகர இதனால் பழிவாங்கப்பட்டிருக்கிறார். அதற்காக சக அதிகாரிகள் உண்மையில் வெட்கப்பட வேண்டும். அதாவது, பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே அவர்களது சகாவுக்கு எதிராக அவர் சம்பந்தப்பட்ட விடயத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவருடைய பிணை மனு தீர்ப்பை வழங்கிய மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அவர் பற்றி குறிப்பிடும்பொழுது, அவருடைய வழக்கு புனையப்பட்டது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆகவே, இவ்வாறு இந்த சட்டத்தின் மூலம் பலரும் பழிவாங்கப்படுகிறார்கள். எல்லா மட்டங்களிலும் அதன் பாதிப்பை பற்றி இப்பொழுது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாட்டைப் பொறுத்தவரையில் ஜனநாயக உரிமைகள் இன்று மறுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.

ஆகவே, நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு மக்களுடைய உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டிய காலம் வந்திருக்கிறது. ஆகவே, இவ்வாறான சட்டத்தை நாங்கள் எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது. சட்டப்புத்தகத்தில் இருந்து அது கிழித்தெறியப்பட வேண்டும். அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அமெரிக்க டொலரோடு ஒப்பிடும் பொழுது இலங்கை நாணயத்தின் பெறுமதியில் வீழ்ச்சி காணப்படுவதன் காரணமாக பொருளாதார ரீதியில் நாடு பாரிய பின்னடைவை நோக்கி பயணிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அதனால் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்களுடைய பணத்தைக் கூட அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்புவதில், அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

ஆகவே, இவ்வாறாக நாடு பொருளாதார ரீதியில் பாரிய அளவில் பின்னடைவைக் கண்டிருப்பதன் விளைவாகவும் எல்லா மட்டங்களிலும் இன்று நிலைமை மோசமாகி அதலபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதை நாங்கள் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம் என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் - கண்டியில் ரவூப் ஹக்கீம் காட்டம்!

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House