
posted 11th March 2022
எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் என்றும் இல்லாதவாறு தாக்கத்தை எல்லா நிலைகளிலும், அதாவது எல்லாத் துறைகளிலும், ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
நாட்டின் மூச்சுக் கூட அடங்கிடுமோ என்ற பிரமை. முக்கியமாக, உணவின்மை, எரிபொருள் போதாக்குறை, எரிவாயு இல்லா நிலை, விலைவாசி உயர்வு, பட்டினி, இவற்றால் ஏற்படும் தாக்கங்கள் என்று எல்லாவற்றையும் தாங்கி, சகித்துக் கொண்டு, பரீட்சைக்குத் தம்மை வெகு தீவிரமாக ஆயத்தப்படுத்தி, தத்தமது கனவுகளை நனவாக்க கண் விழித்து, களைப்புற்று, வென்றிடுவோம் என்ற நம்பிக்கையில், வாழ்க்கையின் போராட்டத்தின் மத்தியிலும் கல்வி கற்கும் இப்பிஞ்சு உள்ளங்களுக்கு இளைக்கும் கொடுமையை எந்த மனித நேயமும் ஏற்றுக்கொள்ளாது.
இது போதாதென்று, எரிபொருள் பதுக்கல், அறா விலைக்கு விற்றல், பொருள் பதுக்கல், இதெல்லாவற்றையும் காணாத அதிகாரங்கள் - அதற்கும் ஒரு சுத்தமான விளக்கங்கள் - உரிய நடவடிக்கைகள் இல்லாத ஞாயங்கள் - மலிந்து கிடக்கும் வாக்குறுதிகள் - என்றுமே அவிழ்க்க முடியாத சிலந்தி வலை முடிச்சுக்கள் - ஒன்றுமே நடவாதது போன்று காட்டும் முகபாவனைகள் இருக்கும் வரை மக்களின் பசி ஆறாது.
மறுபுறம், தவறென்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் குரல்கள்.
ஐம்புலன்களைப் பாவியுங்கள் - மக்களுறும் நோவு புரியும். அது அனைவரையும் வாழவைக்கும்.
இதெல்லாம், வேதாந்தம் நமக்கென்ன சோறா போடும், இவையெல்லாம் என்று உள்ளங்கள் பல நினைப்பதை உணரமுடிகின்றது.
இவை காணாததென்று, பிரதேச சபை உறுப்பினர் மாட்டு வண்டியில் எரிபொருள் ஊருக்கே காணுமான அளவு கொள்கலன்களுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்று எரிபொருள் நிலையங்களை நோக்கி வரவு.
அவ்வளவு அவர்களுக்குக் கஷ்டம் என்று ஒரு அனுதாப ஊர்வலம். அத்துடன், பிரதேச சபை உறுப்பினர்கள் இவை எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி பிரதேச சபை அலுவலகத்திற்குப் பயணம்.
இந்நடவடிக்கைகள் ஒரு விதத்தில் வரவேற்கக் கூடிய ஒரு ஆழமான சிந்தனைதான்.
ஆனால், சுகாதாரச் சபீட்சம் என சேதனப் பசளை மூலம் அனைவரின் வயிற்றினில் அடித்த அரசு, மாட்டு வண்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமென்றா இன்னமும் நம்புகின்றீர்கள்?
இந்த உறுப்பினர்களைப் பார்த்த மற்ற உறுப்பினர்களும் மாட்டு வண்டியிலே பாராள மன்றத்திற்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உறுப்பினர்களின் இந்த வரவை பார்க்கும் அரசோ பாராட்டப்பட வேண்டிய விடயமாகக் கருத மாட்டார்கள் என்று ஏன் நாம் நினைக்கக் கூடாது?
எரிபொருள்கள் மூலம் ஏற்படும் இயற்கை மீதான தாக்கங்கள், உலகமே சூடாகும் நிலை (Global Warming) - உலக விஞ்ஞானிகளின் ஆராச்சிகள் - அனுமானங்கள் என்பனவுடன் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் மின்சார வாகனங்கள் (Electric Cars ), சூரிய சக்தி மூலமான மின்சாரம்
(Solar Power), மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காற்றலைப் பண்ணை (Windfarm) என்பன மூலம் கிறீன் ஹவுஸ் விளைவுகளை (Greenhouse Effects)க் குறைக்கும் திட்டங்களாக இவை அறிமுகப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கையிலே, பிரதேச சபை உறுப்பினர்கள் மாட்டு வண்டி பாவித்து நாட்டிற்கும், உலகிற்கும் நல்லது செய்கின்றோம் என்று முன்னோடி மன்னர்களாக இருப்பதாக அரசு சொல்ல எவ்வளவு நேரம் செல்லும்?
எனவே, சிந்திப்போம்!