
posted 25th March 2022
காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட வைத்தியசாலை காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
இதன்போது காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 09.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் பின்னர் காச நோயை முடிவுக்கு கொண்டு வர முதலிடுவோம், உயிர்களை காப்பாற்றுவோம்: எனும் தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி இடம்பெற்றது.
இப்பேரணி காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்து வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக பஜார் வீதியை அடைந்து மீண்டும் வைத்தியசாலையை அடைந்தது.
இப்பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்தியவாறு வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதாரப் பிரிவினர் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 17,553 பேருக்கு காச நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு 336 பேர் அடையாளங்காணப்பட்டதுடன், 48 பேர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்