
posted 27th March 2022
கோட்டாபய அரசை பிணை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மீண்டும் முயற்சி......! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு!
கோட்டாபய அரசை பிணை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மீண்டும் முயற்சிக்கிறது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஈழத் தமிழ் உறவினர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களும் வருமாறு.
கடுமையான பொருளாதார பிரச்சினையிலிருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டது என்பதைத்தான் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப்கும் இடையில் வெள்ளிக்கிழமை (25) அன்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பு இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அவ் அமைப்பினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ் மக்களுக்கென பிரத்தியேகமாக அரசியல் பிரச்சினை ஒன்றோ, அல்லது அன்றாடப் பிரச்சினைகளோ இருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அதனால்தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதை அவர் தவிர்த்து வந்திருந்தார். தான் தனித்து சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பதை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளான காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களிள் சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தும் கூட, எந்தவிதமான நகர்வையும் முன்னெடுக்க அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. பதிலாக மிருசுவிலில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமைக்காக மரண தண்டனைக்குள்ளான சிங்கள படை அதிகாரி ஒருவரை தமது அதிகாரத்தை பாவித்து மன்னிப்பளித்து ஜனாதிபதி விடுதலை செய்தார். குமாரபுரம் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அரசாங்கம் எவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகும் என்பதற்கு இவை இரண்டும் மட்டுமல்ல மேலும் பல உதாரணங்கள் உள்ளன.
இப்போது பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, சிங்கள மக்கள் கொதித்தெழுந்து வீதிகளில் இறங்கியுள்ள நிலையில், மேற்கு நாடுகளின் உதவி அரசாங்கத்துக்கு அவசரமாகத் தேவையாகவுள்ளது. இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி ஒன்று வெடிக்கலாம் என்பதும், எதிரணிகள் அதனைப் பயன்படுத்த தயாராக இருப்பதும் அரசுக்கு எச்சரிக்கையாகவுள்ளது.
இந்தப் பின்னணியில் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. கடந்த வாரம் கொழும்பு வந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்ரோரியா நூலான்ட், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும் இதனை வலியுறுத்தினார். அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்தப் பின்னணியில்தான், இரண்டரை வருடங்களாக கூட்டமைப்புடன் பேச்சை தவிர்த்து வந்த ஜனாதிபதி அவசரமாக அவர்களைப் பேச்சுக்கு அழைத்தார். கூட்டமைப்பும் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுக்கு சென்றிருக்கின்றது.
இது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமாகவுள்ள மேற்கு நாடுகளின் உதவியைப் பெறுவதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசு போடும் நாடகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணைபோகின்றதா என்ற கேள்வியைத்தான் எழுப்புகின்றது. அந்தியச் செலாவணிப் பிரச்சினையிலிருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டது என்பதைத்தான் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
காணி அபகரிப்பு தொடர்பில் தெரியாத ஒருவராகவா ஜனாதிபதி இதுவரை இருந்துள்ளார்? 2010 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அரசுடன் 18 சுற்றுப் பேச்சுக்களை கூட்டமைப்பு நடத்தியது. அப்போது பேசப்பட்ட விடயங்கள்தான் வெள்ளிக்கிழமை கோட்டாபயவுடன் நடந்த பேச்சுக்களின் போதும் பிரஸ்தாபிக்கப்பட்டன. இவை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்பது போல ஜனாதிபதி சொல்வது முற்றுமுழுதாக ஒரு நாடகம். அதனை நம்புவது போல, வெளியே வந்து கூட்டமைப்பின் பேச்சாளர் சொல்லும் தகவல்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து அரசைப் பாதுகாக்க கூட்டமைப்பு தயாராகிவிட்டது என்பதை பகிரங்கப்படுத்துகின்றது.
தமிழர்களுடைய அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் புலம்பெயர்த்த தமிழ் அமைப்புக்களை தடை செய்துவிட்டு, தமக்கு சார்பான சில அமைப்புக்களுடன் பேசுவதற்கான திட்டம் ஒன்றுடன்தான் அரசு செயற்படுகின்றது. புலம்பெயர் தமிழர்களின் நிதியை வரவளைக்கவே இந்த சதியின் நோக்கம். இதற்கும் கூட்டமைப்பு துணை போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தாயகத்திலும், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு செயற்படுவார்கள் என நாம் நிச்சயமாக நம்புகிறோம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House