
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வீதிக்கு இறங்கி போராடுவோம்
அரசாங்கம் மிக விரைவில் எங்களது வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையேல் வீதிக்கு இறங்கிப் போராடுவோம். இவ்வாறு திருகோணமலை பட்டதாரிகள் தெரிவித்தனர்.
பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் எனவும் திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியத்தின் ஊடகச் சந்திப்பு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
வேலையில்லாப் பிரச்சினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவிமடுக்க வேண்டும். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்காக எங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் நாடியுள்ளோம்.
900 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் வீதிகளிலும் ஏனைய இடங்களிலும் போராடுகிறார்கள்.
35 வயது கடந்துவிட்டது. எங்களுக்கு சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
35 வயதுக்குப் பிறகு நிறுவனங்களிலும் உள்ளீர்ப்பு செய்வது என்பது மிகவும் கடினமாகும்.
உள்வாரி, வெளிவாரி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடுமின்றி எங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
உரிய வயதில், உரிய வேலை வாய்ப்புகளை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என பட்டதாரிகளால் அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)