
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வழக்கை முடிவுறுத்துவற்காக எதிராளிகள் ஒரு நிலைப்பாடு
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரின் மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்த தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்தார். இதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.
அவரின் விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின், அந்த ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ. யோகேஸ்வரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படி கேட்டிருக்கின்றேன். இதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது.
அந்த வகையில், கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்திய செயல் குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய வழக்கை முடிவுறுத்துவது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்போது அதில் பல படிமுறைகள் உள்ளன. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம். சாதாரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்துக்கு பின்னரே முதலாவது விளக்கத்துக்கான திகதி குறிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம்.
அன்றைய தினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராசா, யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறீதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இருப்பினும், கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று சிறீதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன்.
இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தால் நாங்கள் ஏழு பேரும் எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒரு நிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டுக்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டுக்கு இணங்கிக் கொள்வதுடன், ஜூலை 14ஆம் திகதி வவுனியாவில் மத்திய குழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைவை மத்திய செயல் குழுவுக்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தை பெறவேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வரைவை வரும் தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து, அதன் பின்னர் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)