
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வலய பணிமனைகள் முன்பாக ஆசிரியர்கள் நேற்று போராட்டம்
யாழ்ப்பாணத்தின் சகல வலய கல்வி பணிமனைகள் முன்பாகவும் அதிபர், ஆசிரியர்கள் நேற்று புதன்கிழமை கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டும், இலவச கல்வியை தனியார் மயமாக்க வேண்டாம், மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நாடாளவிய ரீதியில் நேற்றைய (12) தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என ஐந்து கல்வி வலயங்களின் பணிமனைகள் முன்பாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் “இலவச கல்வியை தனியார் மயப்படுத்தாதே”, “அரசே மாணவர்களின் கல்வி உரிமையில் கை வைக்காதே”, “அரசே மாணவர்களின் போசாக்கு நிலையை உறுதிப்படுத்து”, “அரசே அதிபர், ஆசிரியர்களின் எஞ்சிய 2/3 பங்கு சம்பளத்தை வழங்கு”, “அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு”, ஆகிய கோரிக்கைகளை கோஷமாக எழுப்பியதுடன், அவை குறித்து எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)