
posted 16th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னார் மறை மாவட்ட ஆயருடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ அவர்களை இன்று காலை (16) மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளைப் பாராட்டிய மன்னாள் ஆயர், மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.
மன்னார் - பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது. அத்துடன், சுற்றாடல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலதிக வலுசக்தியை இந்தியாவுக்கு விற்பனை செய்வது குறித்து பேசப்பட்டு வருவதாகவும், அதற்காக இந்தியா - இலங்கைக்கு இடையிலான குழாய் இணைப்பொன்றை கட்டமைப்பது தொடர்பிலான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் சுற்றுப் பயணத்தின் போது அது குறித்து மேலும் கலந்துரையாட இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோல் இந்தியா - இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அது குறித்து எதிர்வரும் நாட்களில் ஆராயவிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அதேபோல் மன்னாரை சுற்றுலா மத்தியஸ்தானமாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், கப்பல் சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்வதற்கான இயலுமை குறித்து இங்கு பேசப்பட்டது.
அதன்படி இந்த அனைத்து துறைகளின் கீழும் மன்னார் மாவட்டம் எதிர்காலத்தில் பரந்த அபிவிருத்தியை எட்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
மன்னார் மீனவ மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு இதன்போது மன்னார் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
மன்னார் மறை மாவட்ட விகார் ஜெனரல் (Vicar General) அருட்தந்தை.பீ. கிறிஸ்துநாயகம், மடு மாதா தேவாலயத்தின் ஆயர் ஏ.ஞானப்பிரகாசம், பெப்பி சூசை பாதிரியார் உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
16.06.2024
அசல் படிவத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்>>>>>மன்னார் மறை மாவட்ட ஆயருடன் ஜனாதிபதி சந்திப்பு
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)