
posted 10th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது
போலி நாணயத் தாள் அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்திருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைதான சம்பவத்தை அறிந்த அவரின் குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த நபர் ஒருவர் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றை பெற்று தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (08) குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்கள் என்பவற்றை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்கில் காத்திருந்தார்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த பொருட்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை, அவர் குடும்பத்துடன் அரியாலையில் தங்கியிருப்பது தெரிய வந்து , குறித்த வீட்டுக்கு பொலிஸ் குழு விரைந்த போது, வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)