
posted 30th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிள்ளையானின் ஆட்டம் விரைவில் அடக்கப்படும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமாக எமது கருத்துகளை தெரிவிக்க முடியாத வகையில் பிள்ளையான் போன்றவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. எமது ஆட்சி விரைவில் உருவாகும். அப்போது, இவ்வாறான நிலைமைகள் நிச்சயம் மாற்றப்படும். அச்சுறுத்தும் அரசியல்வாதிகள் அடக்கப்படுவார்கள் - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் பெயரை வைத்தே சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைவராகயிருக்கின்றார். அவரது தந்தை ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இல்லாமலிருந்தால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினராக கூட வருவதற்கு சஜித் பிரேமதாஸவுக்கு தகுதியில்லை என்றும் அநுர குறிப்பிட்டார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் அநுர மேலும் தெரிவித்தவை வருமாறு,
இந்த நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர். அந்த மாற்றம் எங்கு ஏற்படவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இன்று ரணிலின் மாற்றத்துக்காக சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், ரணிலுக்கான ஆதரவை இன்னும் மொட்டுக்கட்சி தெரிவிக்கவில்லை, தீர்மானம் இன்னமும் எடுக்கவில்லையென மகிந்த ராஜபக்ஷ சொல்கின்றார். பஸில் ராஜபக்ஷவிடம் கேட்டாலும் அவரும் அதைத்தான் சொல்கினைறார்.
தீர்மானம் எடுத்தவர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் அதில் ஒருவர் மகிந்தானந்த அளுத்கமகே. ஆனால், இவர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறியிருக்கின்றார். இவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். அடுத்தவர், ரொஹான் ரத்வத்தை. அவரும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறுகின்றார். இவர்தான் சிறைச்சாலை அமைச்சராகயிருந்த போது சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கியைக்காட்டி அச்சுறுத்தி மண்டியிட வைத்தவர். அவர் மாற்றத்துக்காக ரணிலுக்கு ஆதரவு வழங்குகின்றாராம். அதேபோன்று கப்பம் வாங்கி உயர்நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க இன்று ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றார்.
இதேபோன்று, மட்டக்களப்பிலும் மாற்றத்துக்காக ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் என பிள்ளையான் அறிவித்துள்ளார். மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்பாக மாற்றமான தலைமைத்துவம் ஒன்று தேவையாகும்.
பல தசாப்தமாக இந்த நாட்டினை ஆட்சி செய்து, பல ஆண்டுகளாக அமைச்சர்களாகயிருந்து பல ஆண்டுகளாக பிரதமராகயிருந்தவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களது மாற்றம் என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் எதிர்பார்ப்பு ஒரு மாற்றமாகயிருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவால் அந்த மாற்றத்தை கொண்டு வரமுடியாது.
அதேபோன்று சஜித் பிரேமதாஸவாலும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்க முடியாது. சஜித் பிரேமதாஸ முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனாக இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்? அவர் ஒரு கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதி வேட்பாளராகவும் இருப்பதற்கு அவரிடம் உள்ள ஒரேயொரு தகுதி அவரது தந்தை ஜனாதிபதியாக இருந்தது மாத்திரமேயாகும்.
அவரைப்பற்றி சரத் பொன்சேகாவே பேசுகின்றார். அவர் ஆட்சிக்காலத்தில் சரத் பொன்சேகாவினை மேடையில் வைத்துக்கொண்டு திருடர்களை பிடிக்கப்போவதாக கூறினார். ஆனால், அவர் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாஸவையே கசினோ விடயத்தில் பிடித்திருந்தார்.
மாற்றம் ஒன்று வேண்டுமென்றால் அந்த மாற்றத்தை செய்யக்கூடியவர்கள் யார் என்றால் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமேயாகும். இந்த நாட்டு மக்கள் மீண்டும் அந்த மிகமோசமான பாதையில் செல்லமாட்டர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இந்த நாட்டில் இனவாதம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்றது. இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது. வடக்கில் ஓர் அரசியல், தெற்கில் ஓர் அரசியல், கிழக்கில் ஓர் அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நாட்டினை ஐக்கியப்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் கோட்டாபாயாவின் வெற்றியானது முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியலிலேயே கிடைத்தது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை வேறுபடுத்துகின்ற அரசியலுக்குப் பதிலாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற அரசியலே செய்ய வேண்டியுள்ளது. அந்த மாற்றத்தினையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். இந்த நாட்டில் இனவாத ரீதியான அரசியலை நாங்கள் முறியடிப்போம்.
இந்த நாட்டுக்கு புதிய அரசியல் ஒன்று தேவையாகும். மக்கள் பணத்தை சூறையாடுவது முற்றாக நிறுத்தப்படும். மக்கள் பணத்தை வீணடிக்காத அரசியல் முன்னெடுக்கப்படும். நீதித்துறைக்கு அடிபணியும் அரசியல் அந்த மாற்றத்தினையே நாங்கள் கொண்டு வருவோம். தற்போதுள்ள அரசியலானது குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியலாகவே உள்ளது.
கடந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் நடைபெற்றது. அது தொடர்பில் ஆராய்ந்துசென்றால் இந்த ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயங்கள் வெளியேவந்தன. சட்டரீதியாகவுள்ள இராணுவம் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும். வேறு யாரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. அவை களையப்பட வேண்டும் என அநுர மேலும் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)