
posted 20th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தோழர் பத்ம நாபாவின் தீர்க்க தரிசனம்
இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின்படியான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் கிடைத்த இணைந்த மாகாண சபையை தோழர் பத்மநாபா தீர்க்க தரிசனமாக ஏற்றுக்கொண்டதுடன் 13ஆவது திருத்தத்தை நிதர்சனமாக நடைமுறைப்படுத்தவும் முனைப்புடன் செயற்பட்டார்.
ஆனால் அன்று அதனை தட்டிக்கழித்து உதாசீனம் செய்தவர்கள் இன்று 13ஆவது திருத்தச் சட்டம் ஏற்புடையது என்ற நிலைப்பாட்டில், அதற்காக பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைப்பாட்டிற்கும் வந்துள்ளனர்”
இவ்வாறு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உதவிப் பொதுச் செயலாளரும், அம்பாறைப் பிராந்திய அரசியல் துறை அமைப்பாளருமான மத்திய குழு உறுப்பினர் தோழர் சலீம் (பிர்தௌஸ்) கூறினார்.
தமிழர் சமூக ஜனநாயக்கட்சியின் (பத்மநாபா - ஈ.பி.ஆர்.எல்.எப்) அனுசரணையுடன், பாண்டிருப்பு 2ஏ அன்பு வழிபுரத்திலுள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலக மண்படத்தில் சிறப்பாக நடைபெற்ற 34ஆவது தியாகிகள் தின நிகழ்விற்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் தியாகி தோழர் கமலநாதனின் (கண்ணன்) சகோதரி டேவிட் ஈஸ்வரி தோழர் பத்ம நாபாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் மறைந்த தோழர்களுக்கு தியாகச் சுடரேற்றி இரு நிமிடமௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் நிகழ்வில் இலவச தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
உதவிப்பொதுச் செயலாளர் தோழர் சலீம் (பிர்தௌஸ்) தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்,
“இன்று 13ஆவது அரசியலமைப்புத்திருத்தம் நாட்டில் பேச்சுப் பொருளாக மாறியிருக்கின்றது. தோழர் பத்மநாபாவின் இது தொடர்பான அன்றைய தீர்க்க தரிசனமான முடிவைத்தட்டிக்கழித்து உதாசீனம் செய்தவர்கள், இந்த தீர்வே ஏற்புடையதென இன்று ஏற்றுக்கொண்டு 13ஆவது திருத்தத்தைக் கையிலெடுத்துள்ளனர்.
தோழர் பத்மநாபாவும் 13 தோழர்களும் சென்னையில் படுகொலை செய்யப்பட்டனர். தனது இறுதி மூச்சு வரை ஈழமக்களின் விடுதலை ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு அதனை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதில் தோழர் பத்மநாபா உறுதியாக நின்றார்.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயன்ற அவர் ஏற்றுக்கொண்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஒன்றே இன்று வரை சர்வதேச ஒப்பந்தமாகத் திகழ்கின்றது.
தோழர் பத்மநாபா கூறியது போன்று “நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். ஐக்கியம் எனும் தளத்தில் நின்று இறுதி வெற்றிவரை உறுதியுடன் பேராட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை சாத்வீக முயற்சிகளுடன் வென்றெடுப்போம்.
நாம் எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்வதுடன் மக்கள் உரிமைகள் சார்ந்த விடயங்களில் முனைப்புடன் செயற்படுவோம்” என்றார். கட்சியின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் தோழர் சசி, நிதிப்பொறுப்பாளர் ரஞ்சித், ஆலோசகர் தோழர் டெவிட் ஆகியோரும் நினைவுரைகளாற்றினர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)