
posted 6th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளர் மூலோபாயம் பயனற்றது
“ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது. தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுகளை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்” என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆணையை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதற்கு அப்பால் தமிழ் மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் இரா. சம்பந்தனை அவரின் இல்லத்துக்கு சென்று சந்தித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணை வழங்கி வருகிறார்கள். இருப்பினும் அவர்கள் வழங்கி வருகின்ற ஆணையை கருத்தில் கொள்ளாது கருமங்களை முன்னெடுக்கின்ற செயல்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.
ஆகவே ஐரோப்பிய ஒன்றியக்குழு உட்படச் சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அளிப்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை அதியுச்சமாகப் பிரயோகிக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாடுகளையோ, சர்வதேசத்துடன் செய்த உடன்பாடுகளையோ ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இல்லை. அரசமைப்பில் உள்ள விடயங்களைக்கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் தயக்கங்களைத் தொடர்ச்சியாகக் காண்பித்து வருகின்றது.
தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். ஆகவே, அந்த உரித்து தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றபோது நிச்சயமாக வெளியக சுயநிர்ணய உரித்தையும் கோருவதற்கான நிலைமைகளே உருவாகும் என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)