
posted 18th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் தியாகிகள் தின நிகழ்வு
தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் (பத்மநாபா - ஈ.பி.ஆர்.எல்.எப்) அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் நாளை 19 புதன் கிழமை தியாகிகள் தின நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெறவிருக்கின்றது.
பாண்டிருப்பு 2ஏ அன்பு வழிபுரத்திலுள்ள தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலக மண்டபத்தில் சமய அனுஷ்டானங்களோடு தியாகிகள் தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உதவிப் பொதுச் செயலாளரும், அம்பாறைப் பிராந்திய அரசியல் துறை அமைப்பாளருமான மத்திய குழு உறுப்பினர் தோழர் சலீம் (பிர்தௌஸ்) தலைமையில் நடைபெறவிருக்கும் நிகழ்வில்,
கட்சியின் பிராந்திய ஒழுங்கிணைப்பாளர் தோழர் சசி, நிதிப் பொறுப்பாளர் ரஞ்சித், ஆலோசகர் தோழர் டேவிட் மற்றும் கட்சி முக்கியஸ்த்தர்கள், ஊர்ப் பெரியார்கள், பொது மக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தியாகச் சுடர் ஏற்றுதல், அஞ்சலி செலுத்துதல், மலர் மாலை அணிவித்தல், தென்னங்கன்றுகள் வழங்குதல், நினைவுரைகள் ஆற்றுதல் என்பன நிகழ்வில் இடம்பெறவுள்ளதாக மத்திய குழு உறுப்பினர் தோழர் சலீம் (பிர்தௌஸ்) தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை தலைமையேற்று வழி நடத்திவந்த செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவும் மற்றும் 13 தோழர்களும் தமிழகத்தில் ஒரே இடத்தில் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே உயிர்த்தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், பொது மக்களையும் நினைவு கூரும் தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)