
posted 18th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுற்றுலாப் பயணிகளின் வருகை புறக்கணிக்கப்படும் வடக்கும், கிழக்கும்
சுற்றுலாப் பயணிகளின் வருகை வட கிழக்கில் குறைவாக இருக்கின்றது. இது திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா என்ற சந்தேசகத்தை ஏற்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (18.06.2024) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் பின்வருமாறு தெரிவித்தார்,
வடக்கு கிழக்கினை பொறுத்த வரையில் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது. கிழக்கு மாகாணத்தின் அறுகம்பை பிரதேசத்தில் அரசாங்கத்தின் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத போதும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர் ஏனெனில் அங்கு Surfing இக்குரிய கடல்வளம் காணப்படுவதாலாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போக்குவரத்து இன்று பிரதானமான பிரச்சினையாக உள்ளது. யாழ்ப்பாணத்தினை பொறுத்த வரையில் பலாலி விமான நிலையம் ஊடாக சில சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சூழல் உள்ளது. ஆனால் மட்டக்களப்பில் உள்ள விமான நிலையம் கடந்த காலத்தில் இயங்கும் நிலையில் இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தினுள் விமானங்கள் தரையிறங்குவதில்லை. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் போன்ற கரையோர பிரதேசங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையானதொரு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பரவலாக பேசப்படும் விடயம் யாதெனில் VFS என்ற தனி நிறுவனம் இன்று சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பான நிதி மோசடியினை மேற்கொள்கின்றது. இதற்கு பிற்புலக் காரணிகளாக அமைச்சர்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எவராக இருந்தாலும் இலங்கைக்குள் வருவதற்கு VISA விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்தினால் VFS என்ற நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கும் அந்தப் பணம் இல்லாமலாக்கப்படுகின்றது.
பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பிற்கு புகையிரதம் வருவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த முயற்சியினால் விசேட கடுகதி ரயில் மட்டக்களப்பிற்கு வருகின்றது. ஆனால் மட்டக்களப்பிற்கு வருகின்ற புகையிரதப் பாதையினை கூட இன்று வரை புனரமைப்பு செய்யாமையின் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் 20ம் திகதி வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, புகையிரத சேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது. ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக வருமானமீட்டுவதற்கான வழியினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென தொடர்ச்சியாக கூறக் காரணம் நாங்களே எங்களது பிரதேசங்களை கட்டியெழுப்ப முடியும். ஜனாதிபதி அவர்கள் இன்று கூட சிறிய பெரும்பான்மையுடன் மாகாண சபைக்கு புதிதாக ஒரு சட்ட மூலத்தினை கொண்டு வரத் தேவையில்லை.
கௌரவ சுமந்திரன் அவர்கள் தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார். முன்பிருந்த மாகாண சபை தேர்தல் முறையில் தேர்தலினை நடத்தக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும். இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதனையே நாங்கள் எண்ண முடியும் என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)