
posted 26th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை பிரதேச செயலகத்தை பூட்டி வீதி மறியல் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி 92 ஆவது நாளாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பிரதேச செயலக நுழைவாயில் கதவைப் பூட்டி மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்களுக்கு மேலாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் பெருமளவில் குவிந்தனர். பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை பூட்டிய மக்கள் அரச உத்தியோகத்தர்களை உள்நுழைய விடாமல் உரிய அதிகாரிகளும், அரசும் தமக்குத் தீர்வைத் தரவேண்டும் என்ற கோஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக 92 ஆவது நாளான நேற்றும் அதிகளவான மக்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபவனியாக சென்றதுடன் கல்முனை நகரில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதால் பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் சூழ்ச்சிகளையும், நிர்வாக அடக்குமுறைகளையும் கணடித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வைத் தரும்வரை போராட்டம் தொடரும் என மக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)