
posted 27th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும்
இலங்கை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளின் பிரகரம் இப்படித்தான் ஆடை அணிய வேண்டுமென்ற கட்டாயமில்லை என்பதால் திருகோணமலை சாஹிறா மாணவிகளது பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடயத்தில் இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டுமென மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளருமான ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
கடந்த காலங்களில் பர்தா, பஞ்சாபி உடைகளை அணிவதற்கு சில பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்ட சமயம் தொடரப்பட்ட வழக்குகளில் ஆடை அணிதல் ஒருவரது சுதந்திரம் என்பதுடன் அவரது உரிமையுமாகும் என உயர் நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முஸ்லிம் மாணவிகள் தமது காதுகளை தெரியக் கூடியதாக தமது பர்தாவை நீக்கிய நிலையில் பரீட்சை எழுத வேண்டும் என்று பரீட்சைத் திணைக்களம் கூறும் விடயம் எமது நாட்டு அரசியலமைப்பின் 111 ஆம் அத்தியாயம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு முற்றிலும் முரணான விடயமாகும்.
எனினும் அரசியலமைப்பை விட உயர் சட்டமாக பர்தாவை நீக்கி, காதுகளை வெளிப்படுத்தும் விடயத்தை முஸ்லிம் மாணவிகள் மீது இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பலவந்தமாக திணித்து வருகிறது.
இந்நிலைமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதன் பின் கடுமையாக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி இத்தாக்குதலுக்குப் பின்னர் பரீட்சை திணைக்களத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முஸ்லிம் அதிகாரிகளுக்கு முழு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சைத் திணைக்களத்தில் முஸ்லிம் அதிகாரிகள் பலர் கடமையாற்றினர். முஸ்லிம்களது சமய ரீதியான பிரச்சினைகள் வரும்போது அவற்றிற்கு முஸ்லிம் அதிகாரிகள் தீர்வு கண்டனர்.
ஆனால், தற்போது பொதுப் பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்கள நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற முஸ்லிம் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், முஸ்லிம் பரீட்சார்த்திகள் எதிர்நோக்குகின்ற விடயங்கள் தொடர்பாக பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடாமல் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு வருகின்றனர். இது பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கூட தெரியப்படுத்தாமல் உள்ளனர்.
பரீட்சைத் திணைக்களத்தின் பொதுப் பரீட்சைகள் தொடர்பான 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சட்டத்திற்கான திருத்தமாக முஸ்லிம் மாணவிகள் அல்லது முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் தமது பர்தாவை நீக்கி, காதுகள் தெரியக் கூடியதாக அணிந்திருக்க வேண்டும் என்ற விடயம் பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் திருத்தப்பட்டதாக இல்லை.
மேலும், இது தொடர்பாக ஏதாயினும் வர்த்தமானி அறிவித்தலை பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் வெளியிட்டிருப்பின் அதற்காக சட்ட மா அதிபரின் கருத்துக்கள் கோரப்பட்டு வெளியிடப்பட்டதா என்ற விடயமும் பூரண தெளிவற்றதாக உள்ளது.
இந்நிலையில் திருகோணமலை சாஹிறாக் கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தமது காதுகளை வெளிப்படுத்தவில்லை என்பதற்காக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரு வார காலத்திற்குள் வெளியிடுவதாக கல்வியமைச்சர் வாக்குறுதி அளித்து இரு வாரங்கள் கடந்துள்ளபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)