
posted 29th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அரச ஓய்வூதியர் சம்பளமும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்
அரச ஊழியர்களது சம்பளங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள உதய செனவிரட்ண குழுவானது ஓய்வூதியர்களின் சம்பளங்களையும் மீளாய்வு செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இதற்கென பிரத்தியேகமான மீளாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். முஹம்மட் முக்தார் மகஜர் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துளளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
2016 - 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை நிறுத்தி வெளியிடப்பட்ட பொது நிருவாக சுற்றறிக்கை 35/2019 (1) இல் ஓய்வூதியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறப்பட்டது.
அதன்பின் 2021ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக சுமார் 500 மில்லியன் ரூபா அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 04 வருடங்களாகியும் எதுவும் நடைபெறவில்லை. அவ்வாறாயின் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது?
பொதுவாக சேவையில் உள்ள அரச ஊழியர்களது சம்பளங்கள் மீளாய்வு செய்யப்படும்போது ஓய்வூதியம் பெறுவோரது ஓய்வூதியமும்
மீளாய்வு செய்யப்படுவதும் இதன்போது சேவையில் உள்ள உத்தியோகத்தர்களது அதிகரிப்பில் 70 சதவீத அதிகரிப்பு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதும் ஒரு வழமையான நிருவாக நடைமுறையாகும்.
ஆனால் தற்போது அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகின்ற போது ஓய்வூதியர்களுக்கு 7000 ரூபா வழங்குவதற்குப் பதிலாக வெறும் 2500 ரூபாவே வழங்கப்படுகிறது. அதுவும் ஏப்ரல் மாதம் முதலே வழங்கப்படுகிறது. ஆனால் அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. இவ்வாறு பல அநீதிகள் ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்பட்டு வருகிறன.
ஆகையினால் நாடாளாவிய ரீதியில் உள்ள சுமார் 6,80,000 அரச ஓய்வூதியதாரர்களது சம்பள முரண்பாடுகளையும் குறிப்பாக 2016 / 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற சுமார் 1,80,000 அரச ஊழியர்களது சம்பள முரண்பாடுகளையும் ஆராயும் வகையில் உதய செனவிரட்ண
குழுவிற்கு பணிப்புரை வழங்கப்பட வேண்டும். அல்லது இதற்கென தனியானதொரு குழு நியமிக்கப்பட வேண்டுமென தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)