
posted 5th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் சிலை அமைக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ்
தேசிய நல்லிணக்கமும் அணுகுமுறைகளும் மட்டுமல்லாது எமது தற்துணிவுமே இன்று சிவகுமாரன் சிலை கம்பீரமாக நிமிர்ந்திருக்க காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஈழப் போராட்ட வரலாற்றில் உயிர் தியாகம் செய்த முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவு தினத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் உருவச் சிலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈகச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் தொடர்ந்தும், தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர் அவர்களது நினைவேந்தல்களை செய்வதற்கான ஏற்பாடுகளும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவது அவசியமாகும். இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை.
பொன் சிவகுமாரனது உருவச்சிலை தற்போதுள்ள உருவச்சிலை நிறுவப்படுவதற்கு முன்னர் மூன்று தடவைகள் உடைத்தெறியப்பட்டது. இதற்கு சரியான புரிதல் இன்மையே காரணம் என்று நினைக்கின்றேன்.
ஆனால் 1999களில் அன்றைய அரசுடன் எமக்கிருந்த நல்லுறவு, எமது தேசிய நல்லிணக்க வழிமுறை என்பவற்றுடன் எமக்கிருக்கும் தற்துணிவுமே இந்த சிலையை அமைப்பதற்கும் தலைநிமிர்ந்திருக்க முக்கிய காரணமாக உள்ளது.
அதுபோலதான் யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்திலுள்ள மன்னர்களது சிலைகள், முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் சிலை, யாழ்.மடத்தடியிலுள்ள தனிநாயகம் அடிகளார் சிலை போன்றனவும் நிறுவப்பட்டன.
இதேநேரம் பொன் சிவகுமாரனது நினைவு நாளான இன்று தமிழர் அரசியல் பரப்பில் உள்ள பல கட்சியின் தலைவர்கள் முக்கியஸ்தரக்ள் பிரமுகர்கள் என ஒன்றாக கூடியிருப்பதானது இந்நாளை அனைவரும் எமது இனத்தின் ஒரு பொதுவான நாளாக அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பவைகளை பாதுகாத்துக்கொண்டு இழந்தவைகளை ஈடுசெய்யும் வகையில் முன்னோக்கி நகரவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவதை போல, எமது மக்களின் உரிமைசார் விவகாரங்களிலும் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புக்களை அனைத்து தரப்பினரும் இணைந்து முன்னெடுக்க முடியும்.
அதேபோன்று, எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் நாம் முழுமையான ஒத்துழைப்புகளுடன் முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்" எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விடுதலை வித்துக்கள் தினம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் வித்தாகிப் போன தோழர்கள் உட்பட ஈழப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து மரணித்த அனைத்து இயக்கங்களின் போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் விடுதலை வித்துக்கள் தினமான இன்றைய நாளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நினைவு கூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறிப்பாக பொன் சிவகுமாரனது நினைவு நாளான இன்றைய நாளில் ஒவ்வொரு வருடமும் குறித்த விடுதலை வித்துக்கள் தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஈழப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த முதலாவது போராளியான தியாகி பொன். சிவகுமாரின் 50ஆவது நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை எதிர்வரும் ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த தோழர்கள் நினைவுரப்படுவர் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் - தோழர் கீ.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)