
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அதிபர், ஆசிரியர்கள் கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம்
இலங்கையின் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சுபோதினி அறிக்கையின் மூன்றில் இரண்டு பகுதி சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி இன்னும் இரண்டு பகுதி வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி இலங்கை பூராகவும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று ஊர்வலமாக பிரதான வீதி வரை சென்றது.
சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, அரசே சுபோதினி அறிக்கையின் மூன்றில் இரண்டு பகுதியை வழங்கு, பொருட்களின் விலைகளை குறை, கல்விச் சுமையை பெற்றோர் மீது திணிக்காதே, மாணவர்களுக்கு மானிய முறையில் கற்றல் உபகரணங்களை வழங்கு, போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தி நூற்றுக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் எதிர் வருகின்ற 27ஆம் தேதி நாடு தழுவிய ரீதியில் இணைந்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை நாங்கள் செய்வதற்கு உத்தேசித்து உள்ளோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)