
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு உதவி செய்யும் USAID

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக, வர்த்தக பிணக்குகளைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளுக்கான (ADR) அணுகலை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது. அமெரிக்க அனுசரணையுடன் இலங்கையிலுள்ள 23 சர்வதேச வர்த்தக மத்தியஸ்தர்கள் பயிற்சியினையும், அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்வதற்கு இம்முன்முயற்சி வழிவகுத்துள்ளது. வணிக நிறுவனங்கள் தமது பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடரும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக விரைவான மற்றும் செலவு குறைந்த ஒரு மாற்றீட்டை வழங்கக்கூடிய இலங்கையிலுள்ள தகுதிவாய்ந்த மத்தியஸ்தர்களின் எண்ணிக்கையை இது இரட்டிப்பாக்கியுள்ளது.
இந்த 23 மத்தியஸ்தர்களும் USAID இன் வினைத்திறன் மற்றும் செயற்திறனுடைய நீதி (Efficient and Effective Justice -EEJ) எனும் செயற்திட்டத்தின் கீழ், தகவல் தொடர்பு, சிக்கலைத் தீர்த்தல், உணர்வுகளை முகாமைசெய்தல் மற்றும் தடைகளை வெல்லல் போன்ற முக்கிய பரப்புகளில் விரிவான பயிற்சியினைப் பெற்றுள்ளனர். ADR மற்றும் ADR பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற, லாப நோக்கற்ற, புகழ்பெற்ற சுயாதீன நிறுவனமான சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த மத்தியநிலையம் (SIMC) இந்தப் பயிற்சியை நடத்தியது. ஒரு நான்கு மாத வழிகாட்டல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர், இந்த மத்தியஸ்தர்கள் 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் இலங்கையில் சுமார் 100 வர்த்தக பிணக்குகளில் மத்தியஸ்தம் செய்வதற்கு தமது புதிய திறன்களைப் பயன்படுத்துவார்கள்.
வணிகங்களுக்கும் வணிகங்களுக்குமிடையே அல்லது வணிகங்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையே அல்லது வணிகங்களுக்கும் நுகர்வோருக்குமிடையேயான பிணக்குகளுக்கு ஒரு விரைவான தீர்வை ADR இன் ஒரு முக்கிய வடிவமான வர்த்தக மத்தியஸ்தம் வழங்குகிறது. இம்முறையானது செலவு குறைந்ததாக இருப்பதுடன், வணிக உறவுகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், சர்வதேச தீர்வு ஒப்பந்தங்கள் மிகவும் செயற்திறனுடன் அமுலாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கும் அது உதவி செய்கிறது.
புதிதாக பயிற்சியளிக்கப்பட்ட வர்த்தக மத்தியஸ்தர்களை கௌரவிப்பதற்கான ஒரு நிகழ்வில், உரையாற்றிய அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சொனெக், “சர்வதேச சிறந்த நடைமுறைகளைத் தழுவி ஒரு சாதகமான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்கு இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. இப்பங்காண்மையானது செலவுநிறைந்த வழக்குகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான திறன்களை மத்தியஸ்தர்களுக்கு வழங்குவது மட்டுமன்றி, அவர்களின் திறன்களின் தொடரான விருத்திக்கும் உதவிசெய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார ரீதியிலான மீண்டெழும்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்குப் பங்களிப்புச்செய்கிறது.
இலங்கையில் ADR இற்கு விரிவான உதவிகளை USAID வழங்குகிறது. வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், ADR மத்திய நிலையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வர்த்தக மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை மற்றும் ADR சிறந்த நடைமுறைகள் ஆகிய விடயங்களில் பயிற்சியளிப்பதற்காக உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் EEJ செயற்திட்டம் ஒத்துழைப்புடன் பணியாற்றுகிறது. மேலும், சர்ச்சைகளை விரைவாகத் தீர்த்தல் மற்றும் நீதி அமைப்பில் உள்ள தாமதங்களையும் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்குவதையும் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் EEJ ஆனது, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் வர்த்தக மேல் நீதிமன்றங்களின் பங்காண்மையுடன் நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் மத்தியஸ்தத்திற்கான முன்னோடி நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்த விரிவான முன்முயற்சிகளூடாக இலங்கையில் நீதித்துறைச் செயன்முறையின் ஒட்டுமொத்த வினைத்திறனை EEJ மேம்படுத்துகிறது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)