
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றியையிட்டு ஹக்கீம் வாழ்த்து
இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே அந்நாட்டு பாராளுமன்றத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவம் பெற்று வந்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அந்தக் கட்சியின் தேர்தல் வெற்றி குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே .எம். காதர் மொகிதீனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய லோக்சபாவுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் போட்டியிட்ட மூவர் அமோக வெற்றி அடைந்திருப்பதையிட்டு இலங்கையில் அதன் தோழமை கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேருவகை அடைகின்றது .
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி, கேரளாவில் பொன்னானீ தொகுதியில் டாக்டர் அப்துல் சமது சமாதானி, மலப்புரம் தொகுதியில் ஈ.ரீ. முகம்மது பசீர் ஆகியோர் வெற்றிவாகை சூடியுள்ளமையையிட்டு இலங்கையில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்தியாவில் முஸ்லிம்களை பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறெந்தக் கட்சிக்கும் இல்லாத தனிச் சிறப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு இவ்வாறாகக் கிட்டியிருப்பதையிட்டு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)