
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி ரணிலுடன் இணையவே மாட்டேன் - சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு
'ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஒருபோதும் நான் அரசியலை முன்னெடுக்கப் போவதில்லை” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கனவே அறிவித்தது போன்று நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக வடக்குக்கு வந்த சஜித் பிரேமதாஸ தனது பயணத்தின் இறுதி நாளான இன்று (13) வியாழக்கிழமை செய்தியாளர்களை யாழ். ஊடக அமையத்தில் சந்தித்தார்.
அப்போது, நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றேன். பாடசாலைகளுக்கு, மருத்துவமனைகளுக்கு என உதவிகளை செய்வது தேர்தலுக்காக அல்ல. அது எனது நீண்ட நாள் திட்டம். இதற்கமையவே நீண்ட காலமாக அனைத்து இடங்களிலும் இதனை ஒரு பணியாக செய்து வருகின்றேன்.
நான் இங்கு வந்து மைதானத்தில் கதைத்த ஒரு விடயத்தை சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். அதனை வைத்து எனக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, நல்லாட்சி காலத்தில் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. அந்த நினைவில்தான் அந்த மைதானம் தொடர்பாக இளைஞர்களிடம் வினவினேன். ஆனால், அந்த இடம் மண்டைதீவு என்பது நினைவுக்கு வரவில்லை. மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கட்டமாக இந்த மைதானத்தை அமைப்போம்.
இப்போது நாட்டின் அரசியல் வேறு வியூகத்தில் செல்கின்றது. அதிலும் ஜனாதிபதி ரணிலின் செயல்பாடு ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி நடக்கின்றதே ஒழிய சாதாரண மக்களுக்கானது அல்ல. ஜனாதிபதி ரணில் வடக்குக்கான பயணத்தின் போது பெருமளவிலான பெயர் பலகைகளை திறந்து வைத்து வருகின்றார். ஆனால், அவை என்றுமே பெயர் பலகையாக இருக்கப் போகின்றன. உதாரணமாக கிளிநொச்சி பூநகரியில் நகரமயமாக்கல் என 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது ஆறு மாதங்கள் அண்மித்துள்ள போதும் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதமேனும் செலவு செய்யப்படவில்லை. உண்மையில் இதுவே யதார்த்தமாக உள்ளது. அவ்வகையில் ஜனாதிபதி சொல்லும் வடக்கின் அபிவிருத்தி என்னவென்பதை புத்தியுள்ள வடக்கு மக்கள் புரிந்து கொள்வார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கனவே அறிவித்தது போன்று அமுல்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றார்.
இதன்போது செய்தியாளர்கள், ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற நிலைப்பாட்டில் கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“இதனை முழுமையாக நான் மறுக்கிறேன். மீண்டும் மீண்டும் அதை தருகிறேன் இதைத் தருகிறேன் என்று கதைகள் சொல்லப்படும். ரணிலுடன் இணைந்து அரசியலை முன்னெடுக்கப் போவதில்லை. நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை” என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)