
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சீன கடலட்டை பண்ணைகளை வடக்கில் சிறீதரன் காட்டுவாரா?
வட பகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றன என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா - இவ்வாறு சவால் விடுத்துள்ளார் ஈ. பி. டி. பி. கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன்.
கடந்த காலங்களில் மரண வியாபாரத்தை முன்னெடுத்த அவருக்கு இவ்வாறான பொய்கள்தான் தற்போது தேவையாக இருக்கின்றன என்றும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சாடினார்.
மேலும்,
“சுவிற்சர்லாந்தின் டவோஸ் (Davos) நகரில் நடைபெற்ற தமிழர் பொருளாதார மாநாட்டில் “சீன நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கடலட்டை பண்ணைகள் புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளன. இவை கடற்றொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வடக்கு மீனவர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறீதரன் கூறியுள்ளார்.
“ஆனால், வடக்கிலும், மத்தியிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரம் இருந்த காலப் பகுதியிலேயே யாழ்ப்பாணம் அரியாலையில் சீன நாட்டின் நிறுவனத்துக்கு கடலட்டை குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கான கடலட்டை பண்ணையை இவர்கள் வழங்கியிருந்தார்கள்.
“பின்னர் கடற்றொழில் அமைச்சராக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்ற பின்னர் குறித்த சீன கடலட்டை பண்ணை மூடப்பட்டது. அவ்வாறிருக்கின்றபோது சிவஞானம் சிறீதரன் எந்தவித அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை புலம்பெயர் தேசங்களின் நிகழ்ச்சிகளில் பொய்யுரைத்து வருகின்றார்.
“வடக்கு, கிழக்கில் குறிப்பாக வன்னி பிரதேசத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர் வகுக்கின்ற திட்டங்கள் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றுவருவதை பொறுத்துக்கொள்ள முடியாத சிறீதரன் போன்றோர், தமது அரசியல் இருப்புகளும் கேள்விக்குறியாக இருக்கின்ற சூழலில் இவ்வாறான அவதூறுகளையும் பொய் பிரசாரங்களையும் நம்பியே தமது அரசியலை ஓட்டவேண்டியிருக்கின்றது.
ஆயினும், சிவஞானம் சிறீதரன் வடக்கில் எங்கே எந்த இடத்தில் சீன நிறுவனத்துக்கு கடலட்டை பண்ணைகள் உள்ளன என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)