
posted 15th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
என்மீதுள்ள அரசியல் பயம்தான் காரணம் ரிஎன்ஏ கட்டியெழுப்பப்படுவதற்கு

என்மீதுள்ள அரசியல் பயம் காரணமாகத்தான் ரிஎன்ஏ என்ற ஒன்றை பிரபாகரன் கட்டியெழுப்பினார். புலம்பெயர் தமிழர்கள் பிரபாகரனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரின் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கிற்கு விஜயம் மெற்கொண்டிருந்த சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் 13ம் திருத்தம் மற்றும் அதற்கு மேல் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். வடக்கினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அதற்கு என்ன கூறுகின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,
அதற்கு பதிலளித்த அமைச்சர்,
நான்வடக்கு என்று சொல்லமாட்டேன், தமிழ் மக்களை, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறவன் என்றே கூற விரும்புகி்றேன். நாங்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்த வேளையில் வட கிழக்கு, மலையகம் உள்ளடங்கலாக தமிழ் பேசும் மக்கள் என்ற கோசத்தை முன்வைத்துதான் போராட்டத்தை தொடங்கினோம்.
இடையில் அந்த போராட்டம் தவறான வழிநடத்தல்கள், அணுகுமுறைகள் காரணமாக பலவீனப்பட்டு திசை திரும்பிவிட்டது. இந்த நேரத்தில்தான் எங்களிற்கான பொன்னான வாய்ப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் எமது கைகளிற்கு கிடைத்தது.
அதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் துரதிஸ்டவசமாக ஈபிடிபியைத் தவிர பொதுவாக எல்லாரும் அதை நிராகரித்தார்கள். ஈபிடிபி வெளிப்படையாக இதுதான் எமது மக்களிற்கான தீர்வாக இருக்குமென்று அன்றிலிருந்து சொல்லி வந்தது.
உங்கள் கேள்வியின்படி வட இலங்கைக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற ரணில் விக்ரமசிங்க, சஜித் ிபரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று முக்கியமான தலைவர்கள் வந்திருந்தார்கள்.
தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களெல்லாம் 13ம் திருத்த சட்டத்தில் எவ்வளவு தருவீர்கள்? அரைவாசியா முக்கால்வாசியா முழுவதும் தருவீர்களா என்றெல்லாம் வெட்கம்கெட்டத்தனமாக அவர்கள் கதைக்கின்றார்கள்.
ஏனென்றால், அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் எமது கைகளிற்கு கிடைத்தது. அதனை நாங்கள் பயன்படுத்தவில்லை. அது யாருடைய தவறு?
இலங்கை அரசாங்கமாக இருக்கலாம், இந்திய அரசாக இருக்கலாம். அவர்கள் தங்களுடைய நலன்களிலிருந்துகொண்டுதான் பிரச்சினையை பார்ப்பார்கள். நாங்கள்தான் எமது மக்களின் பிரச்சினைகளை முன்நிறுத்தி அணுகியிருக்க வேண்டும்.
ஆனால் இங்கு புண்ணுக்கு வலியா? மருந்துக்கு வலியா? என்றால் தமிழ் அரசியல் எல்லாம் மருந்துக்கு வலி என்ற சுயலாப அரசியலை முன்னெடுத்து சென்றதுதான் எமது மக்களிற்கான சாபக்கேடானது. இருந்தாலும், அன்றாவது இந்த நிலைப்பாட்டுக்கு வந்தார்கள் என்று பார்க்கலாம். அன்று எதிர்க்கும்போதும், இன்று ஆதரிக்கும்போதும் சரி அதில் உண்மைத்தன்மை இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
என்னுடைய அனுபவத்தில், பொதுவாக தமிழருடைய தரப்பில் அரசுகளுடன் கூடிக்குலாவுவார்கள். இறுதியில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்று கூறுவார்கள். ஆனால் மலையக தலைவர்களும், முஸ்லிம் மக்களுடைய தலைவர்களும் அரசுகளுாடு கூடிக்குலாவினாலும், ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பது போல அவர்களின் பிரச்சினைகளை தீரும் வகையில் அணுகியமையால்தான் அவர்களுக்கு வெற்றியளித்தது.
ஆனால் ஆரதிஸ்டவசமாக தமிழ்ப் பிரதிநிதிகள் என்று சொல்லுபவர்கள், பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருக்கும் வகையில் அணுகும்போது இதெல்லாம் நடக்கும். இந்திய அரசும், இலங்கை அரசும் இவ்வாறு செய்துவிட்டார்கள் என்று கூறுவதெல்லாம் பம்மாத்து. தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகின்ற விடயமாகும்.
இலங்கை அரசாங்கமாக இருக்கலாம், இந்திய அரசாங்கமாக இருக்கலாம், அவர்கள் தங்களின் நலன்களிலிருந்துகொண்டுதான் பிரச்சினையை பார்ப்பார்கள். நாங்கள்தான் எங்கள் மக்களின் பிரச்சினைகளை முன்நிறுத்தி பிரச்சினைகளை அணுக வேண்டும்.
இப்போது நீங்கள் சொன்னது போல தமிழ், முஸ்லிம், மலையகம் என அனைத்து மக்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்குமாறுதான் கூறினார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டார்கள். ஆனால் தமிழ் மக்களினுடைய தலைவர்களால் ஏன் தீர்க்க முடியவில்லை?
அவர்களிற்கு அக்கறையில்லை. தமிழர்களுடைய பிரச்சினையை தீரா பிரச்சினையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், ஆற்றல் இல்லை என்பதும்தான் அர்த்தம். எங்களுக்கு கிடைத்த வாய்ப்பினையும் நாங்கள்தான் தவற விட்டுள்ளோம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது பொன்னான வாய்ப்பு. அன்று அதனை நாங்கள் பாவிக்காமல் இன்று அரைவாசி தருவீர்களா? முக்கால்வாசி தருவீர்களா என்று போய் கேட்கின்றார்கள். அன்றைக்கு கிடைக்கும்போது நாங்கள் அதை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
காற்றுள்ள போது தூற்றிக்கொள் என்பது போல, அன்றைக்கு நாங்கள் அதை பாவித்திருந்தால் இன்று உங்களிடம் அந்த கேள்விகூட வந்திருக்காது எனவும் அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
இன்று இருக்கின்ற அரசியல் சூழலில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் அவரிடம் வினவியபோது,
உங்களுக்கு தெரியும் பிரபாகரன் என்மீதுள்ள அரசியல் பயம் காரணமாகத்தான் ரிஎன்ஏ என்ற ஒன்றை கட்டியெழுப்பினார். சாக்கு மூட்டைக்குள் கிழங்குகளை போட்டுக் கட்டிவிட்டது போல கட்டிவிட்டு போய்விட்டார். இப்போது கட்டு கழன்றுவிட்டது.
கட்டு கழன்றால் கிழங்குகள் எல்லாம் என்னவாகும். தங்கள்பாட்டுக்கு உருண்டு ஓடும். அதுதான் இன்று நடந்தது. இப்போது மீண்டும் தேர்தல் வரப் போகிறது. ஐக்கியம் என்று சொன்னால்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இன்று மீண்டும் அதே கோசத்தோடு வருகின்றார்கள்.
உலகத்துக்கு காட்ட வேண்டும், சர்வதேச நாடு கூர்ந்து பார்க்கிறது, குனிந்து பார்க்கின்றது, துள்ளிப் பார்க்கின்றது என்று சொல்லலாம். கடந்த 50 வருடங்களாக தமிழ் மக்களுடைய ஐக்கியத்தை காண்பித்து என்ன செய்தார்கள்.
அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகள் தவிர வேறு ஒன்றையும் காணவில்லை. ஆனால் பிரபாகரன் புலம்பெயர் தமிழர்களுக்கு நல்லதொரு அலுவலை செய்திருக்கிறார்.
இவ்வாறு சில பிரச்சினைகளை உருவாக்கியபடியினால் இன்று உலக நாடுகளிற்கு சென்று தமிழர்கள் நன்றாக இருக்கின்றார்கள். அவர்கள் பிரபாகரனுக்கு அல்லது பிரபாகரன் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)