
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியலாளாின் வீட்டின் மீது அதிகாலை வேளையில் தாக்குதல்
அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் குறித்த கும்பல் தீ வைத்து கொளுத்துப்பட்டுள்ளது.
அச்சுவேலி பத்தமேனி காளிகோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்று (13) வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறைக் கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மீன் தொட்டியை அடித்து உடைத்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
பின்னர் வீட்டின் வெளியே நின்ற ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளுக்கும், அவரது சகோதரனின் முச்சக்கரவண்டி மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவற்றுக்கும் தீ வைத்துள்ளனர். அதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளன.
“திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வீட்டினுள் வீசி விட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)