
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இளைஞனை காரினால் மோதிய வைத்தியருக்கு பிணை
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை காரினால் மோதி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு ஒரு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் இவ் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (8) இரவு 11 மணியளவில் கல்முனை வீதியில் தனது காரில் பயணித்துக் கொண்டிருநத போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற 28 வயதுடைய இளைஞன் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்ததால் அந்த இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தையடுத்து தப்பிச் சென்ற வைத்தியரது கார் அன்றைய தினம் இரவே கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீட்கப்பட்டதுடன் வைத்தியரும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)