
posted 1st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அகில *இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்*
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கூட்டமும் றிஸ்லி முஸ்தபா கட்சியில் இணைந்து கொள்ளும் சிறப்பு விழாவும் சாய்ந்தமருது பாவா வரவேற்பு மண்டபத்தில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வரும் பொது சனஐக்கிய முன்னணியின் பிரபல அரசியல்வாதியுமான றிஸ்லி முஸ்தபாவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
றிஸ்லி முஸ்தபா கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டவராவார்.
பாலஸ்தீன மக்களுக்கான பிரார்த்தனையினையடுத்து இக்கூட்டம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் அமைப்பின் பிரதி தலைவர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஐயுப்கான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அப்துல்லா மஹ்றூப், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்எஸ்.சுபைர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. றஸ்ஸாக் ஜவாத், எம்.ஐ.எம். மாஹிர், உள்ளிட்ட பல பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தனர்.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)