
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த தாயும், மகளும்
பாடசாலை பேருந்துக்காக வீதியோரமாகக் காத்திருந்த தாயாரையும் மகளையும் ஹன்ரர் வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே நசியுண்டு பலியாகினர்.
அதிவேகமாகப் பயணித்த ஹன்ரர் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
வவுனியா - பூவரசன்குளம் - கன்னாட்டி பகுதியில் நேற்று வெள்ளிக் கிழமை (16) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அந்த இடத்தை சேர்ந்த சிவலோகநாதன் நிருபா - வயது 6, அவரின் தாயாரான சிவலோகநாதன் சுபோகினி - வயது 38 ஆகியோரே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
பாடசாலைக்கு மகள்களை அனுப்புவதற்காக வீட்டின் முன்பாக வீதியோரத்தில் அவர்களுடன் தாயார் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அந்தச் சமயம் வவுனியாவில் இருந்து மன்னாரை நோக்கி அதிவிரைவாக பயணித்த ஹன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்றவர்களை மோதித்தள்ளியது.
ஹன்ரரின் ரயருக்குள் அகப்பட்டு தாயும் ஒரு மகளும் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மகள் வேகமாக வந்த ஹன்ரரரை கண்டதும் வளவுக்குள் ஓடியதால் தப்பினார் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய ஹன்ரர் வாகனம் அங்கிருந்து தப்பிச் செல்ல முனைந்த நிலையில் அங்கு நின்றவர்கள் அதனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். வாகனத்தில் மூவர் இருந்த நிலையில் ஒருவர் தப்பியோடியுள்ளார். ஏனைய இருவரையும் பிடித்த மக்கள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய ஹன்ரரை மக்கள் சேதப்படுத்தியதுடன், அதனை எரியூட்டவும் முயன்றதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. எனினும், பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தால் வவுனியா - மன்னார் வீதியில் சில மணி நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் பறனாலயங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)