
posted 18th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முஸ்லிம் சமூகத்தை நட்டாற்றில் விடும் முயற்சி
வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றும், அது சம்பந்தமாக நாம் முண்டியடித்துக் கொண்டு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், அதை வந்தபின் பார்ப்போம் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொலைக்காட்சி பேட்டியொன்றில் சொல்லியிருப்பது முஸ்லிம் சமூகத்தை நட்டாற்றில் விடும் முயற்சியாகும்.
இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறகப் அப்துல் மஜீட் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் தெரிவித்துள்ளார்.
அந்த மெலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் அபிலாஷை என்றும், அதற்கு குறுக்கே நாம் நிற்கத் தேவையில்லை எனவும் ஹக்கீம் சொல்வது சரியாயின் இது விடயத்தில் முஸ்லிம்களின் அபிலாஷை என்ன என்பதை முஸ்லிம்களின் அதிக வாக்குப்பெற்ற கட்சியின் தலைவரான ஹக்கீமுக்குக் கடமை இல்லையா? ஏன் இவரால் அதனை சொல்ல முடியாமல் உள்ளது?
வடக்கு கிழக்கை இணைக்கும் சந்தர்ப்பம் வந்தால் முஸ்லிம்களிடம் தமிழ் கட்சிகள் வரும் என ஹக்கீம் சொல்வதன் மூலம் கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஏற்கனவே 1987ம் ஆண்டு முஸ்லிம்களிடம் கேட்காமல் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது போல் மீண்டும் இணைக்கப்பட்டால் அதன்பின் தலையில் அடித்துக்கொள்வதா என்ற சாதாரண புத்தி கூட ஹக்கீமுக்கு இல்லையா?
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி இப்போதே நாம் நமது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்காத நிலையில் அவற்றை இணைக்கும் சூழல் வந்ததும் முடியாது என முஸ்லிம்கள் சொன்னால் இவ்வளவு காலமும் உங்கள் நிலைப்பாட்டை சொல்லாமல் இருந்து விட்டு இப்போது எண்ணை திரண்டு வரும் போது முஸ்லிம்கள் தாழியை உடைக்கலாமா? இது துரோகம் அல்லவா? என ஹக்கீம் இழுபட்டு திரியும் தமிழ் கூட்டமைப்பினர் முஸ்லிம்கள் மீது பழி போட்டால் என்ன செய்வது என்பதற்கு ஹக்கீமின் பதில் என்ன?
அதே போல இனப்பிரச்சினை தீர்வுக்கு முஸ்லிம்கள் தடை செய்கிறார்கள் என்ற பழிச்சொல்லுக்கும் சமூகம் ஆளாவது மட்டுமல்ல, உங்கள் நிலைப்பாட்டை முன்னரே சொல்லியிருக்கலாமே என அரசாங்கமும் கேட்கும்.
ஆகவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான அவரது கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தை நட்டாற்றில் விடுவதற்காக சொல்லும் செஞ்சோற்றுக்கடனாகவே தெரிகிறது.
ரவூப் ஹக்கீமின் இந்த கபடத்தனத்தை முஸ்லிம்கள் தெளிவாக புரிந்து கொண்டு அவரின் கருத்தை பகிரங்கமாக எதிர்க்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கை இணைக்காமல் பிரிந்த வடக்கு கிழக்கில் அதிகாரம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)