
posted 15th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முதலாவது நடமாடும் மக்கள் சேவை
கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்ட மக்களின் குறைகளை இலகுவாக தீர்த்து வைக்கும் தனது முதலாவது நடமாடும் மக்கள் சேவையை அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடத்தினார்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது குறைகளை முன்வைத்தனர்.
கல்வி, கலாசாரம், விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகள், காணிப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன்போது உடன் தீர்த்து வைக்கப்படக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நடமாடும் மக்கள் சேவையில் வழங்கப்பட்டதுடன் காலம் தாழ்த்தி தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக ஏனைய அதிகாரிகளின் கவனத்திற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நடமாடும் மக்கள் சேவையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரிகளில் கற்றை நெறிகளை பூர்த்தி செய்து நியமனத்தை எதிர்பார்க்கும் பயிற்சி ஆசிரியர்கள் தம்மை அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை கேட்டறிந்து கருத்தில் கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளர் மற்றும் மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணத் திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட திணைக்களின் தலைவர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)