
posted 22nd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முக்தார் மீது தாக்குதல் - சந்தேக நபர் விளக்கமறியல்
ஊடகவியலாளரும், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம். முக்தார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான ஊடகர் ஏ.எல்.எம். முக்தார் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் மற்றும் சி.சி.ரி.வி. காட்சி என்பவற்றுக்கு அமைவாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தரின் சகோதரர் ஒருவரே மருதமுனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்த நீதவான், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முக்தார் சார்பில் முஹம்மட் றமீஸ், முஹம்மட் சுவாஹிர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (18) இரவு தனது வீட்டிற்கு அண்மித்த வீதியில் பேரக் குழந்தை சகிதம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், கூரிய ஆயுதத்தினால் (கத்தி) முக்தாரின் கழுத்துப் பகுதியை வெட்டி, காயங்களை ஏற்படுத்தியிருந்தார். இதையடுத்து அவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
கல்வித் துறைசார் தொழிற் சங்கவாதியாகவும், சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் அரச, தனியார் ஊடகங்களின் பிராந்திய செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்ற முக்தார், அரச நிறுவனங்களில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடி, முறைகேடுகள் பற்றி சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)