
posted 11th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement
மாகாண அதிகாரங்கள் மீள வழங்கப்படும் பிரதமர் - விக்னேஸ்வரன் சாந்திப்பில் இணக்கம்
மத்திய அரசினால் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்கள் மீள வழங்கப்படும் - பிரதமர் விக்னேஸ்வரன் சாந்திப்பில் இணக்கம்
எஸ் தில்லைநாதன்
13-வது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சிலவற்றை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில் அதனை மீள வழங்குவதற்கு பிரதமர் சாதகமாகப் பதிலளித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (08) பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு பாராளுமன்ற கட்டடத் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
குறித்த சந்திப்புத் தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே பதிமூன்றாவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் சந்தித்து பேசிய நிலையில் நானும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டேன்.
சந்திப்பில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் மத்திய அரசால் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்களை மீள வழங்க வேண்டும் என ஜனாதிபதியுடன் சந்திப்பில் கோரிக்கை விடுத்தேன்.
குறித்த சந்திப்பில் தமிழ் கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழரசுக் கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதின் மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதிலும் பார்க்க ஏற்கனவே ஜனாதிபதி புதிய அரசியல் அமைப்பு தருவதாக கூறினார் அதை நடைமுறைப்படுத்துமாறு கூறினார்.
ஆனால், ஜனாதிபதி தமிழ் கட்சிகள் புதிய அரசியலமைப்பை தற்போது நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவில்லை. 13ஐ நடைமுறைப்படுத்துமாறு கூறுகிறார்கள். 13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்க உங்கள் சார்பில் பிரதிநிதி ஒருவரைத் தாருங்கள் என்றார். தமிழரசு கட்சி சார்பில் எவரது பெயரும் வழங்கப்படவில்லை.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் தொடர்பில் துறை சார்ந்த அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன் பேசுமாறு கோரிய தன் விளைவாக குறித்த சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் நானும் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செயலாளர் கலாநிதி க. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டோம்.
சந்திப்பில் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்கள் உரிய வகையில் செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக கல்வி, சுகாதாரம், விவசாயம், போன்ற துறை சார்ந்த மாகாண அதிகாரங்கள் சில மத்திக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீள மாகாணத்துக்கு வழங்க வேண்டும்.
மேலும், மாகாண சபை அதிகாரங்களை வலுப்படுத்துவதற்காக நியதிச் சட்டங்கள் உருவாக்குவது தொடர்பிலும் பிரதமருக்கு எடுத்து கூறினோம்.
அது மட்டுமல்லாது 1992 ஆம் ஆண்டு 58 இலக்க சட்டத்தின் பிரகாரம் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவையாளர்களை மாகாண அதிகாரங்களுக்கு மீள வழங்க வேண்டும்.
அது மட்டுமல்லாது, மாகாணத்தில் இருந்து மத்திக்கு எடுக்கப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகள் மீள மாகாணத்திற்கே வழங்க வேண்டும்.
இவ்வாறு பல விடயங்களை பிரதம மந்திரியிடம் எடுத்து கூறிய நிலையில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் சாதகமாகப் பதிலளித்ததுடன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
எனது சார்பில் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரனை 13 ஆம் திருத்த நடைமுறை தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் எனது சார்பில் அவருடைய பெயரை பரிந்துரை செய்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)