
posted 19th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மட்டக்களப்பு, அம்பாறையில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் யோகா விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சர்வதேச யோகா தினமான எதிர்வரும் 21 ஆம் திகதி புதன் கிழமை சிறப்புற இந்த யோகா விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், 21ஆம் திகதி புதன் கிழமை மாபெரும் யோகா செயல் விளக்க நிகழ்வு சுதேச மருத்துவ திணைக்களம், தொற்றா நோய் தடுப்புப் பிரிவு என்பவற்றின் ஆதரவுடன் இடம்பெறவுள்ளது.
மனித நேயத்திற்கான யோகா எனும் தொனிப்பொருளில், மேற்படி விழிப்புணர்வு யோகாப் பயிற்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் 21 புதன் கிழமை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் தெரிவித்தார்.
இந்த மாபெரும் நிகழ்வில் சுமார் ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள யோகா விழிப்புணர்வு நிகழ்வு 21 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெறவுள்ளது.
புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுரவிக்கிரம நாயக்கவின் வழிகாட்டலுடனும், பங்கேற்புடனும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு, காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)