
posted 3rd June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந் திருவிழாவுக்கான ஏற்பாடுகள்
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருந் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று முன்தினம் வியாழன் (01) நடந்த இந்தக் கலந்துரையாடலில் கடல் போக்குவரத்தில் ஈடுபடும் படகுகளின் நிலைத்தன்மைச் சோதனை சான்றிதழை கட்டாயம் பெற்றுக்கொள்வதுடன், படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையையும் உறுதிப்படுத்துவதுடன், தாழ்வு படகுகள் ஏணிப்படி வசதி அமைத்தலை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள் , போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோரை கைது செய்தல், கடல்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல், பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, கடல்போக்குவரத்து நேரத்துக்கு அமைய தரைப்போக்குவரத்தை ஏற்படுத்தல், வாகனத் தரிப்பிடம், பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல், தரை மற்றும் கடல் போக்குவரத்து நேர அட்டவணையை காட்சிப்படுத்தல், மின் இணைப்பு, படகுகளில் மோட்டாா் வாகனங்களை ஏற்றும்போது பிரதேச செயலரிடம் அனுமதி பெறல், யாசகம் பெறுவோர் உள்வருவதை தடுத்தல் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், கடைகளுக்கு பிரதேச சபையின் அனுமதி, நடமாடும் மருத்துவ சேவை, சுகாதாரம் மற்றும் குடிதண்ணீர் தேவை, மின்சார தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்கவேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மேலதிக மாவட்ட செயலாளர், நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவர், வேலணை பிரதேச செயலாளர், வேலணை வலயக் கல்விப் பணிப்பாளர், மின்சார சபை மின் அத்தியட்சகர், சுகாதாரத் துறை, இ. போ. ச., கடற்படை, பொலிஸ் மற்றும் துறை சார் அதிகாரிகள் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)