
posted 27th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
திருட்டு சந்தேகத்தில் இருவர் கைது
யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நடத்திய விசாரணைகளில் அளவெட்டியை சேர்ந்த 21 வயது மற்றும் 25 வயதான இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட இலத்திரனியல் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர். கைதான சந்தேக நபர்கள் தெல்லிப்பழை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சுன்னாகம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)