
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கொத்தணி வேலைத்திட்டம்
சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புக்கான கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் செய்யப்பட்டு, இரண்டாம் நாள் நிகழ்வாக இச்சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம்.என்.எம். பைலான், ஏ.எல்.எம். ஜெரீன், ஏ.எல்.எம். அஸ்லம், மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர் எம். அத்ஹம் மற்றும் வலய மேற்பார்வையாளர்களும் இவற்றை நெறிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் டெங்கு நுளம்பு களப் பரிசோதனை உத்தியோகத்தர்கள் இதன்போது சுற்றுச் சூழல்களில் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸாரும் கலந்து கொண்டு, இவ்வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
கொத்தணி வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் 04 வலயங்களுக்குமான அனைத்து திண்மக் கழிவகற்றல் வாகனங்களும், ஆளணியினரும் முழுமையாக களமிறக்கப்பட்டு, சாய்ந்தமருது வலயத்தின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)