
posted 14th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அருள் மழையால் மகிழ்ச்சி
அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் மழை வேண்டி ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் ஓதப்பட்டு வருகின்ற நிலையில் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் செவ்வாய்க் கிழமை (13) மாலை வேளையில் நீண்ட நேரம் கனதியான மழை பெய்துள்ளதுடன் மாவட்டம் பூராவும் குளிர்ச்சிகரமான சூழல் ஏற்பட்டிருப்பதானது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது என்று மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ. அன்ஸார் மெளலானா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிகூடிய வெப்பமான காலநிலையை தணிப்பதற்காக மழை பொழிய வேண்டி ஐவேளைத் தொழுகைகளிலும் குனூதுந் நாஸிலாவை ஓதுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை கடந்த ஞாயிற்றுக் கிழமை (11) வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதற்கமைவாக தற்போது தொழுகைகளின்போது குனூத் ஓதப்பட்டு வருகின்றது. இவ்வாறு குனூதில் கேட்கப்பட்ட துஆ கபூலாகியதன் காரணமாக நீண்ட காலத்திற்குப் பின்னர் இறைவனின் அருள் மழை பொழியத் தொடங்கியிருக்கின்றது.
அகோர வெப்பத்தினால் அவதியுறுகின்ற மக்களுக்கு இம்மழையானது அளவற்ற மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகையினால், வெள்ளிக் கிழமை வரை தொடர்ந்தும் ஐவேளைத் தொழுகைகளில் குனூதுந் நாஸிலாவை ஓதி வருமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இதன்மூலம் இன்ஷா அல்லாஹ் வெப்பம் தாண்டவமாடுகின்ற எல்லா இடங்களிலும் போதியளவு மழை கிடைப்பதுடன் உஷ்ணம் தணிந்து, சாதாரண காலநிலை ஏற்படும் என்ற இறை நம்பிக்கையை திடப்படுத்திக் கொள்வோமாக என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)