
posted 26th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
33ஆவது தியாகிகள் தின நிகழ்வில் சிவசக்தி ஆனந்தன்
“மறைந்த நம்தோழர் பத்ம நாபா அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று தீர்க்கதரிசனமாக எடுத்த முடிவை ஏற்றிருந்தால் எமது மக்களுக்கு ஏற்பட்ட முள்ளி வாய்க்கால் பேரழிவைக்கூட தடுத்திருக்கலாம், சமஷ்டியை அடையும் தூரத்திற்குக்கூட வந்திருக்க முடியும்”
இவ்வாறு, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33ஆவது தியாகிகள் தின இறுதியானதும், பிரதானமானதுமான நிகழ்வு கிழக்கின் முக்கிய தமிழ் பிரதேசமான காரைதீவில் நேற்று (25) உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் எஸ் புண்ணியநாதன் (கரன்) தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டிலும், முன்னணியின் அரசியல் உயர் பீட உறுப்பினர் தோழர் சின்னையா (சர்மா) வின் தலைமையிலும் நிகழ்வு இடம்பெற்றது.
காரைதீவு விபுலாநந்தா கலாச்சார மண்படத்தில் நடைபெற்ற நிகழ்வில் காரைதீவு முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் செல்லையா இராசையா, காரைதீவு ஆலயங்களின் அறங்காவலர் ஒன்றியத் தலைவர், க. குணசிங்கம் உட்பட வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் ஈழ மக்களின் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் மற்றும், சகோதர கட்சிகளின் முக்கியஸ்த்தர்களும், தியாகிகளின் உறவுகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு செயலாளர் சிவசக்தி ஆனந்தன் மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தியாகிகளின் உருவப் படத்திற்கு உறவுகள் மலர்தூவி ஈகைச் சுடர்களையும் ஏற்றி வைத்து இரு நிமிடமௌனமும் அனுஷ்க்கப்பட்டது.
சிவசக்தி ஆனந்தன் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
தோழர் பத்ம நாபா தமிழ் மக்களின் விடிவுக்காக தமது 39 ஆவது வயதிலேயே எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எனும் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பினார்.
இதன் மூலம் தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்காகத் தீர்க்கதரிசனமான முடிவுகளை எடுத்தார். அவரது இழப்பு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படியான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் கிடைத்த இணைந்த வடகிழக்கு மாகாண சபையை அவர் தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால், நமது மிதவாத தலைவர்களும், ஆயுதக் குழுக்களும் இந்த முடிவுக்கு ஆதரவு வழங்கவில்லை. அவ்வாறு அன்று அவரது முடிவை ஏற்றிருந்தால் எம் மக்கள் கண்ட முள்ளிவாய்க்கால் பேரழிவையே தடுத்திருப்பதுடன் சமஷ்டியை அடையும் தூரத்திற்கும் வந்திருக்க முடியும்.
எனினும் ஆயுதப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஐந்து கட்சிகள் இன்று ஒழுங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்ற கட்டமைப்பில் இறுக்கமான, பலமான, பட்டறிவுடன் அரசியல் தீர்வு தொடர்பில் புதிய பாதையில் பயணித்து வருகின்றன. எம் பயணமோ நமது தியாகிகள் கொண்ட இலட்சியங்களை அடைவதற்கு நிரந்தரமானதும், கௌரவமானதுமான அரசியல் தீர்வை நோக்கிய தொடரும்.”
மேலும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் இன்று பூதாகரமாக வெளிக்கிளப்பிய வண்ணமுள்ளன. நாட்டில் ஊடகச் சுதந்திரத்திற்கு ஆப்பு வைத்து, ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் சட்டத்தைக் கொண்டு வர அரசு துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது.
உதவித் திட்டக் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலமைகள் தொடரும் பட்சத்தில், மீண்டும் அரகலய போன்ற போராட்டங்கள் வெடிக்கும் சாத்தியங்களே உள்ளன” என்று அவர் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)