
posted 1st June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை ஆளுநரிடம் வேண்டுகோள்
கிழக்கு மாகாண சபையில் இன விகிதாசாரத்திற்கு அமைவாக அமைச்சுகளின் செயலாளர் மற்றும் நிர்வாக சேவை உயர் பதவிகளுக்கு முஸ்லிம் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பேரவையினால் ஆளுநருக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அதன் செயலாளர் செயிட் ஆஷிப் மேலும் குறிப்பிடுகையில்;
தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்தோரே காலாகாலமாக ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019 ஆம் ஆண்டு தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து முதன்முறையாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்ட போதிலும் சில மாதங்களிலேயே அவர் அப்பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது.
முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் தமது சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற அபிலாஷையும் வேண்டுதலும் முஸ்லிம்கள் மத்தியில் நிறையவே இருந்து வருகின்ற நிலையில் சகோதர இனத்தைச் சேர்ந்த செந்தில் தொண்டமானின் நியமனத்தை உளப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விடாமல், கிழக்கில் முஸ்லிம் சமூகத்தை சமத்துவமாக நடத்துவதற்கு புதிய ஆளுநர் முன்னிற்பார் என எதிர்பார்க்கின்றோம்.
கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற பாரபட்சமான செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆற்றல், அனுபவம், தகுதி, சேவை மூப்பு இருந்தும் முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள், உரிய பதவி நிலைகளுக்கு நியமிக்கப்படாமல், திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.
இனப்பாகுபாடு காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காணி, கல்வி, சுகாதாரம், நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவற்றையெல்லாம் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் நிவர்த்தி செய்யும் வகையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத அழுத்தங்களுக்கு அடிபணியாமல், முஸ்லிம்களின் உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து, செயற்பட முன்வர வேண்டும் என ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் எமது கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)