
posted 23rd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் பதவியேற்பு விழா
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 25 ஆவது வெள்ளிவிழா வருட (2023 / 2024) புதிய நிருவாகிகளின் பதவியேற்பு விழா வெகுவிமரிசையாக நடைபெறவிருகின்றது.
எதிர்வரும் 25 ஆம் திகதி கல்முனை கிறீன் பார்க்றிசோட், மண்டபத்தில் விழா நடைபெறும்.
கழகத்தின் 2023 / 2024 வெள்ளி விழா வருட புதிய நிருவாக சபை பதவியேற்புக்கான இந்த விழாவில், தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது உதவிமாவட்ட ஆளுநர் லயன் கயா உபசேன (LION GAYA UPASENA PMF / MAF / SLF) பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
கழகத்தின் புதிய நடப்பாண்டுக்கான (2023 / 2024) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லயன் பொறியியலாளர் எம். சுதர்சன் ( MAF) செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள லயன் ஏ.எல்.எம். பாயிஸ் ( MAF) பொருளாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லயன் எம். பரமேஸ்வரநாதன் (MAF) ஆகியோருட்பட தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நிருவாகிகளுக்கு இரண்டாவது உதவி மாவட்ட ஆளுநர் லயன் கயா உபசேன விழாவில் உத்தியோக பூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 25 வருடகாலமாக இனமத பேதங்களுக்கப்பால் தேவைகளுடைய பல்வேறு தரப்பினருக்கும் கல்முனை நகர லயன்ஸ் கழகம் அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சுனாமி அனர்த்தம் போன்ற பல சந்தரப்பங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள், இடர்களின் போதெல்லாம் பாமர மக்களை நாடிச் சென்று உதவிகள், நிவாரணங்கள் வழங்கி மக்களை ஆற்றுப்படுத்திய முதன்மைப் பெருமையும் இக்கழகத்திற்கு உண்டு.
தன்னலம் கருதாத, மக்கள் சேவையை இலட்சியமாகக் கொண்ட நிருவாகிகளையும், உறுப்பினர்களையும் கொண்ட இக் கழகம் 25 ஆவது வெள்ளிவிழா வருடத்டதில் மேலும் சிறப்புற்று திகழ மக்கள் அமைப்புக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)