
posted 9th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றப்பட்டதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இச்செயலானது இலங்கை தேசத்தில் இன்னமும் தமிழ், சிங்கள இரு பக்க பேரினவாதம் நிலவுவதை காட்டுகிறது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் (Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை சுதந்திரமாகப் பின்பற்ற விரும்பும் மாணவன். அதன் அடிப்படையில் அவர் தாடி வைத்திருக்கிறார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மேற் குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.
தாடி வைத்திருப்பதன் காரணமாக பல துஷ்பிரயோகங்களுக்கு குறிப்பிட்ட பீடாதிபதியினாலும், சிரேஷ்ட விரிவுரையாளரினாலும் மாணவன் நுஸைப் கடுமையாக சாடப்பட்டிருக்கின்றார் என்று ஊடக செய்திகள் சொல்கின்றன.
இம்மாணவர் விரிவுரைகளுக்கு சென்றிருந்தும் தாடிவைத்திருந்தமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் விரிவுரைகளில் உட்கார விடாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால் பரீட்சைக்கு தோற்றுவதற்கான போதிய வரவு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் என அம்மாணவர் அஞ்சுகிறார்.
சென்ற மே மாதம் 31ம் திகதி பரீட்சை எழுதச் சென்ற இம்மாணவன் தாடியுடன் பரீட்சை எழுத முடியாது என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாய திருப்பி அனுப்பினாராம். இதனால் குறிப்பிட்ட பாடத்தினை அவரால் எழுத முடியாமல் போயுள்ளது.
தாடியோடு வந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி பரீட்சை எழுதவிருக்கும் மாணவர் நுஸைபை பரீட்சை எழுத விடமாட்டோம் என குறிப்பிட்ட பீடாதிபதியும், சிரேஷ்ட விரிவுரையாளரும் கூறியிருக்கின்றனர். இதனால் ஒரு வருடத்தினை இழக்கும் நிலைக்கு இம்மாணவர் தள்ளப்பட்டிருக்கிறார் எனவும் செய்திகள் சொல்கின்றன.
இது சம்பந்தமாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் சென்ற 1ஆம் திகதி முறைப்பாடொன்றையும் இம்மாணவர் செய்திருக்கின்றார்.
கலாச்சார அடையாளங்களை அணிவதும், கொண்டிருப்பதும் இலங்கையின் அடிப்படை உரிமைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால் இது விடயத்தில் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு இரு தரப்பாரையும் விசாரணை செய்து அம்மாணவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோருகிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்