
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
அமரர் அருட்பணி சந்திரா பெனாண்டோ அடிகளாரின் 35 வது நினைவேந்தல்
நீதி மறுக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டு வன்முறையும், கொடுங்கோமையும் தாண்டவம் ஆடிய சூழ்நிலையில் நீதிக்காய் உண்மைக்காய் குரல் அற்ற மக்களுக்கு குரலாக திகழ்ந்த மானிட நேயம் கொண்ட அமரர் அருட்பணி சந்திரா பெனாண்டோ அடிகளாரின் நினைவேந்தல் இடம்பெற்றது.
1988.06.06 ந் திகதி இந்திய இராணுவத்தோடு இணைந்து செயலாற்றிய துணைக் குழுவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு மண்ணின் மறை சாட்சியாக மடிந்த அருட்பணி சந்திரா பெனாண்டோ அடிகளாரின் 35 வது நினைவேந்தலே செவ்வாய் கிழமை (06) காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இதன் செயலாளர் அருட்பணி கந்தையா ஜெகதாஸ் அடிகளார் தலைமையில் மட்டக்களப்பு தூய மரியன்னை பேராலய முன்றலில் அருட்பணி சந்திரா பெனாண்டோ சமாதியில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வ மத பிராத்தனை நடைபெற்றது. இந்த சர்வ மத பிராத்தனையைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றன.
இவ் அஞ்சலி உரையானது அமரர் அருட்பணி சந்திரா பெனாண்டோ அடிகளாருடன் பணியாற்றிய பிரமுகர்களால் சாட்சியாக பகிரப்பட்டன.
இதில் முதலாவது உரையை அமரர் சத்திரா பெனாண்டோ அடிகளாருடன் பணியாற்றிய தூய மிக்கேல் கல்லூரி மற்றும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முன்னைநாள் அதிபர் அருட்சகோதரர் ஸ்ரீபன் அவர்களும், மட்டக்களப்பு இந்து மாமன்ற முதல்வர் திரு பாரதிதான் அவர்களும், மட்டக்களப்பு பல் சமய ஒன்றியத்தின் பொருளாளர் ஜனாப் முகமட் இக்பால் அவர்களும் சாட்சிய பகிர்வாக தங்கள் உரைகளை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தினர் பல சமய பிரமுகர்கள் அமரர் அருட்பணி சந்திரா பெனாண்டோ அடிகளாரின் குடும்பத்தார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)