ரணிலின் பேச்சும் கியூவின் நீட்சியும்

இலங்கையில் எரிபொருளுக்கான நீண்ட கியூ வரிசைகள் சற்று தணிந்திருந்த போதிலும், மீண்டும் இதற்கான கியூவரிசைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை ஒன்றை அடுத்தே இந்த எரிபொருளுக்கான கியூ வரிசைகளில் மக்கள் பெருமளவில் திரண்டு வருவதாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விசேட உரையின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக விருக்கும் நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும்” எனத்தெரிவித்திருந்தார்.

இந்த உரையின் எதிரொலியாகவே மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் படையெடுத்து நீண்ட கியூ வரிசைகளில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொள்ள முனைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

இதிலும் விசேடமாக பெற்றோல் இல்லை, டீஸல் இல்லை என்ற அறிவிப்புக்கள் தொங்கவிடப்பட்டு மூடிய நிலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாகக்கூட மக்கள் திரண்டு நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

பெரும்பாலும் எரிபொருள் விநியோகிக்கும் நிரப்பு நிலையங்களில் அதிகாலை முதலே மக்கள் திரள்வதுடன் நள்ளிரவைத் தாண்டியும் கியூ வரிசைகளில் நிற்பதையும் காணமுடிகின்றது.

இலங்கைவாழ் மக்கள் படும் அவலத்தின் ஒரு அங்கமே இந்த, எரிபொருள், எரிவாயு கியூவரிசைகளென்றால் மிகையாகாது.

ரணிலின் பேச்சும் கியூவின் நீட்சியும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)