
posted 9th June 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இணைந்துள்ளன.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று புதன்கிழமை முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீட சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்கள், விரிவுரையளர்கள் போன்றவர்களுக்கும் பல்வேறு வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தும். இதன் மூலம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில் துறை மன்றத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும்.
யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு தேவையான பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், போன்றனவற்றுக்கு வளவாளர்களாக முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் தொழில்படுவதுடன் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதில் உதவுதல், குறுகியகால டிப்ளோமா, மற்றும் சான்றிதழ் கற்கைகளை அறிமுகப்படுத்துதல் மூலமாக அங்கத்தவர்களின் தொழில் சார் அறிவைப் பெருக்கி கொள்ள உதவுதல், தொழில்துறை நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற நெருக்கடி நிலையை சிறந்த முறையில் முகாமை செய்வதற்குரிய தந்திரோபாய ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்குதாரர்களாக செயல்படுதல், வணிகத்தின் வளர்ச்சி ஆராய்ச்சிகள் ஆலோசனைகள் முதன்மையான இடத்தை வகிக்கின்றது. இவ்வாறான ஆலோசனைகள் தேவைப்படும்போது முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் நிபுணர் குழு தேவையான ஆலோசனைகளை வணிக குழாமுக்கு வழங்குவதன் மூலம் தொழில்துறையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
இதேபோல இந்த உடன்படிக்கையின் மூலம் மாணவர் சமூகம் பல்வேறு வழிகளில் நன்மைகளைப் பெற்றுகொள்ள வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பின் ஓர் அங்கமாக அமைந்துள்ள உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பைபெற்று கொள்ளவும், மாணவர்களுக்கு பகுதி-நேர வேலை வாய்ப்பை வழங்கி உதவுதல், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றம் செயல்படுத்தும் செயல் திட்டங்களில் மாணவர்கள் நேரடியாக பங்குபற்றி பயிற்சிகளை பெற்றுக்கொள்வதன் வழியாக மாணவர்கள் தங்கள் நடைமுறை அறிவை விருத்தி செய்துகொள்வதுடன் விழிப்புணர்வையும் பெற்றுக்கொள்வர்.
சில மாணவர்கள் தொழில் முயற்சியாளர்களாக காணப்படுவதனால் இத்தகைய மாணவர்களின் பங்குபற்றுதல், உள்நாட்டு மட்டத்திலும் சர்வதேசே மட்டத்திலும், புதிய உற்பத்திகளுக்கு அங்கீகாரம் பெற வழிசெய்யும். இதனால் மாணவர்கள் தமது உற்பத்திகளுக்கு அதிக சந்தை வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
மேலும், யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றமும் முகாமைத்துவக் கற்கைகள், வணிக பீடமும் ஒன்றிணைந்து வணிகக் கண்காட்யை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்வதுடன் தொடர்ச்சியாக இரு அமைப்புகளும் சேர்ந்து தொழில்முயற்சி விழிப்புணர்வை மக்கள் மத்தியிலும் மாணவர் சமூகத்துக்கு இடையேயும் ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தவுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)