பேசாலையில் இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா பேரணி

அகில உலக கத்தோலிக்க திருச்சபையானது ஞாயிற்றுக்கிழமை (19.06.2022) இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை கொண்டாடியது.

இதனை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கு மக்கள் இவ் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியதுடன், அன்று மாலை 5 மணிக்கு புனித வெற்றி அன்னையின் ஆலயத்திலிருந்து திவ்விய நற்கருணை அலங்கரிக்கப்பட்ட வாகனம் சுற்றுப் பிரகாரமாக நான்கு மணித்தியாலங்கள் அலங்கரிக்கப்பட்ட வீதிகள் ஊடாக பரந்த பேசாலை கிராமத்தினூடாக வலம் வந்த வேளையில், தயார் படுத்தப்பட்டிருந்த மூன்று தரிப்பிடங்களில் மறையுரைகள் நிகழ்த்தப்பட்டு பின் மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள வெற்றி அன்னை வளாக முன்றலை சென்றடைந்து, அங்கு நற்கருணை ஆசீர் பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி டிக்சன் அடிகளாரால் இறைமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நற்கருணை சுற்றுப் பிரகாரமும், வழிபாடுகளும் பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்றபோது, சமூக தொடர்பு அருட்பணி மையம் இயக்குனர் அருட்பணி எம். செல்வநாதன் பீரிஸ், வாழவோதய இயக்குனர் அன்ரன் அடிகளார் கீழியன் குடியிருப்பு பங்கு தந்தை அருட்பணி சீமான் கிராடா நிறுவன இயக்குனர் அருட்பணி அ. லொஸ்ரின் அடிகளார் (அ.ம.தி) ஆகியோர் இச் சுற்றுப்பிரகாரத்தில் கலந்து கொண்டு வழிபாட்டில் மறையுரைகளையும் ஆற்றினர்.

பேசாலையில் இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா பேரணி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)